கடந்த 4 நாட்களில் ‘கூலி’ படத்தின் வசூல் ரூ.404 கோடி ரூபாயை கடந்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
ஆகஸ்ட் 14-ம் தேதி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் ‘கூலி’. கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், இப்படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பினால் நல்ல வசூல் செய்து வந்தது. முதல் நாளில் 152 கோடி ரூபாய் வசூல் செய்து, முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற மாபெரும் சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறையத் தொடங்கியது.
கடந்த 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த வசூல் என்பது எதிர்பார்த்ததை விட குறைவுதான் என்றாலும், பலரும் நினைத்ததைப் போல ரூ.1,000 கோடி ரூபாய் வசூலை கடக்க வாய்ப்பில்லை என்பது உறுதி.
மேலும், தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் 85 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறது. இன்றைய வசூல் விநியோகஸ்தர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐந்தாவது நாளான இன்று 7 கோடி ரூபாய் வரையே வசூல் இருக்கும் என்கிறார்கள்.
அதேநேரத்தில், முதல் 4 நாட்களில் வசூலில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையையும் ‘கூலி’ படைத்திருக்கிறது. இதற்கு முன்பாக ‘லியோ’ திரைப்படம் ரூ.403.50 கோடி வசூல் செய்திருந்தது. இதனைத் தாண்டி ‘கூலி’ திரைப்படம் ரூ.404 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது.
தமிழகத்தைத் தாண்டி இதர மாநிலங்களிலும் இன்றைய வசூல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் இப்படத்தினை பெரும் விலைக் கொடுத்து விநியோகஸ்தர்கள் கைப்பற்றி இருப்பதால், கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள். மொத்தத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி, பெரும் நஷ்டத்தை ‘கூலி’ ஏற்படுத்தும் என்பது உறுதி.
இப்படத்துக்கு நடிகர்களின் சம்பளம் என்ற பெயரில் 350 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளது படக்குழு. இது போக படத்தின் பொருட்செலவு, விளம்பரச் செலவும் என படத்தின் ஒட்டுமொத்த செலவு என்பது ரூ.600 கோடி வரை வந்துவிட்டது. இதனால் இப்போதைய வசூல்படி விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு பெரியளவில் நஷ்டம் இருக்காது என்கிறார்கள்.
ஏனென்றால், படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டி.வியே வைத்துக் கொண்டதால், அதன் மூலம் வரும் வருமானம் லாபமாக இருக்கும் என்கிறார்கள். அத்துடன், அமேசான் பிரைம் ஓடிடி உரிமம் மூலம் கிட்டும் வருவாயும் தயாரிப்பு நிறுவனத்தையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.