“சினிமா எடுப்பதில் ‘மாஸ்டர்’ ஆகிவிட்டோம் என நினைத்தது நான் செய்த தவறு” என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘தர்பார்’ மற்றும் ‘சிக்கந்தர்’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவின. இதனால் பலரும் ஏ.ஆர்.முருகதாஸை கடுமையான சாடினார்கள். தற்போது அவருடைய இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் தான் செய்த தவறு என்னவென்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இது தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, “‘7-ம் அறிவு’ படத்தின் இறுதிகட்டப் பணிகளின்போது, ‘துப்பாக்கி’ படத்தின் முதல் பாதி கதை மட்டுமே என்னிடம் இருந்தது. அதைத்தான் எஸ்.ஏ.சி சார் மற்றும் விஜய் சார் இருவரிடமும் சொன்னேன். இந்தப் படம் பண்ணலாம் என்று உடனே கூறிவிட்டார்கள். 2-ம் பாதி இனிமேல்தான் பண்ண வேண்டும் என்றேன். அவுட்லைன் கேட்கலாம் என்று தான் வந்தேன். எனக்கு முதல் பாதியே நன்றாக இருக்கிறது பண்ணலாம் என்று விஜய் சார் கூறினார்.
அப்போது இறுதிகட்டப் பணிகளுக்கு இடையே ‘துப்பாக்கி’ 2-ம் பாதியை தயார் செய்து முழுமையாக அல்லாமல் அவுட்லைனாக கூறினேன். சூப்பர் என்று கூறிவிட்டார் விஜய் சார். ‘7-ம் அறிவு’ வெளியாகி 25 நாட்களில் ‘துப்பாக்கி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டோம். மும்பையில் 9-6 படப்பிடிப்பு என்பதால், 6 மணிக்கு மேல் காட்சியாக யோசித்து 2-ம் பாதி எழுதிக் கொண்டிருந்தேன். அனைத்தையும் அவ்வப்போது முடிவு செய்து எடுத்ததே பெரிய வெற்றி என்று நினைத்தேன். அதுவே எனக்கு பெரிய மைனஸாகவும் மாறியது.
நாம் மாஸ்டர் ஆகிவிட்டோம் என நினைத்துவிட்டேன். இப்படி செய்வது தவறு என்று எனக்கு தோன்றவில்லை. ‘துப்பாக்கி’ படம் தோற்று இருந்தால் தோன்றியிருக்கும், அப்படம் ப்ளாக்பஸ்டர் என்பதால் அப்போது தோன்றவில்லை. நமக்கு இந்தக் கலை கைக்கு வந்துவிட்டது என்று தோன்றியது. இதே பாணியில்தான் கத்தி படமும் பண்ணினேன்” என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.