சென்னை: பாஜக சார்பில் மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாஜக நேரில் அழைப்பு விடுத்து வருகிறது.
மறைந்த நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80). பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர், கடந்த 8-ம் தேதி சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் கால் தவறி கிழே விழுந்ததில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனையில் பல்துறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஆக.15-ம் தேதி மாலை இல.கணேசன் காலமானார். இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், மறைந்த இல.கணேசனுக்கு பாஜக சார்பில் புகழஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை கலைவாணர் அரங்கில் ஆக.21-ம் தேதி மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும், பாஜக தேசிய தலைவர்களும் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக நேரில் அழைப்பு விடுத்துள்ளது. அந்தவகையில், பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலளாளர் ஆர்.எஸ்.பாரதியை சந்தித்து நேரில் இன்று அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, அதிமுக, பாமக, விசிக உள்பட அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பாஜக சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.