புதுடெல்லி: முன்னாள் குடியரசு தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் உயர வேண்டும் என விரும்பி சிபிஆருக்கு அவரது பெற்றோர் பெயர் வைத்துள்ளனர். இதை நிறைவேற்றும் வகையில் அவர் நாட்டின் குடியரசு துணைத் தலைவராக உள்ளார்.
துணை குடியரசு தலைவராக ஜெக்தீப் தன்கர் தன் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து அப்பதவிக்கானத் தேர்தலில் தன் புதிய வேட்பாளரை தேர்வு செய்ய பாஜக ஆலோசித்தது. இதற்கான பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம், டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரது பெயரை அதிகாரபூர்வமாக பாஜகவின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா அறிவித்தார். பிரதமராக நரேந்திர மோடி அமர்ந்தது முதல் பாஜகவின் பெரும்பான எதிர்கால நடவடிக்கைகளை ஊடகங்களால் கணிக்க முடிவதில்லை. இந்தநிலையை மீண்டும் நிரூபிக்கும் வகையில் துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வாகி உள்ளார்.
சிபிஆர் என சுருக்கமாக அழைக்கப்படுபவரின் முமுப்பெயர் சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன். இவர், திருப்பூரில் அக்டோபர் 20, 1957-ல் பிறந்தவர். அப்போது 1952 முதல் இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவராக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இருந்தார். இவரது நினைவால் சிபிஆரின் பெற்றோர்களான சி.கே.பொன்னுசாமி மற்றும் கே.ஜானகி அவருக்கு ராதாகிருஷ்ணன் எனப் பெயர் வைத்துள்ளனர்.
பிறகு 1962-ல் நாட்டின் இரண்டாவது குடியரசு தலைவராகவும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உயர்ந்தார். எனவே, சிபிஆரின் பெற்றோர்கள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் போல் அவர் உயர வேண்டும் என எண்ணி பெயர் வைத்துள்ளனர்.
இந்த நோக்கம் குடியரசு துணைத் தலைவராக அவர் தற்போது அமர இருப்பதால் நிறைவேறியதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தின் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த சிபிஆர், தனது 16 வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார்.
இத்துடன் அதன் தோழமை அரசியல் கட்சியாக இருந்த பாரதிய ஜனசங்கத்திலும் சிபிஆர் இணைந்திருந்தார். தூத்துக்குடியின் வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் பிபிஏ பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றார்.
கல்லூரிக் காலத்தில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரராக இருந்த சிபிஆர், நீண்டதூர ஓட்டம், கைப்பந்து மற்றும் கிரிக்கெட்டிலும் இடம் பெற்றிருந்தார். சிபிஆருக்கு மனைவி ஆர்.சுமதி மற்றும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.
தமிழக அரசியலில் சிபிஆர் காட்டிய தீவிரத்திற்கு 1974 முதல் பலன் கிடைக்கத் துவங்கியது. அந்த ஆண்டில் அவர் பாரதிய ஜன சங்கத்தின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினரானார்.
பாரதிய ஜன சங்கம் பின்னாளில் பாஜகவாக மாறிய பின்பும் சிபிஆரின் முக்கியத்துவம் அக்கட்சியில் தொடர்ந்தது. 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அவர் பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்தார்.
அப்போது அவர் நதிகள் இணைப்பு, தீண்டாமை மற்றும் தீவிரவாதம் ஒழிப்பை தமிழகத்தில் வலியுறுத்தி 18,000 கி.மீ தூரம் 93 நாட்கள் ரத யாத்திரை நடத்தினார். இத்துடன், சிபிஆரும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றி இருந்தார். இதன் பலனாக, 1998 மக்களவை தேர்தலில் பாஜகவின் கோயம்புத்தூர் எம்பியானார் சிபிஆர். அப்போது பாஜகவில் வென்ற 3 எம்பிக்களில் ஒருவராக சிபிஆர் இருந்தார்.
பிறகு மீண்டும் 1999 மக்களவை தேர்தலிலும் சிபிஆருக்கு தொடர்ந்து இரண்டாவது முறை எம்பியாகும் வாய்ப்பு கிடைத்தது. 2012-ல் ஆர்எஸ்எஸ் நிர்வாகியை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஆர் ஆர்பாட்டம் நடத்தி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கைதானார்.
இந்த நிகழ்வு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. அடுத்து 2014 மக்களவை தேர்தலில் கோயம்புத்தூர் பாஜக வேட்பாளரானவர், இரண்டாவது நிலைக்கு தள்ளப்பட்டார்.
அந்த தேர்தலில் தமிழகத்தின் பாஜக வேட்பாளர்களை விட சிபிஆருக்கு அதிகமான வாக்குகளாக 3,89,000 வாக்குகள் கிடைத்தன. அடுத்து 2019 மக்களவை தேர்தலில் சிபிஎம் வேட்பாளரை சிபிஆரால் வெல்ல முடியவில்லை.
பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் சிபிஆருக்கு சிறு, குறு மத்திய தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில் இந்திய நார் வாரிய தலைவர் பொறுப்பு 2016 முதல் 2020 வரை கிடைத்தது. இவரது ஆதரவாளர்கள் சிபிஆரை, ‘தமிழகத்தின் மோடி’ எனவும் அழைப்பது உண்டு.
இதையடுத்து மேலும் உயர்வு பெற்ற சிபிஆர், பிப்ரவரி 12, 2023-ல் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பொறுப்பு ஆளுநராகும் வாய்ப்பும் கிடைத்தது.
தனது அரசியல் அனுபவத்தில் சிபிஆர் பல வெளிநாடுகளுக்கும் பயணித்துள்ளார். இதில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், நார்வே, டென்மார்க், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, எகிப்து, அரபு நாடுகள், ஸ்வீடன், பின்லாந்து, பெல்ஜியம், ஹாலாந்து, துருக்கி, சீனா, மலேசியா, பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகியன இடம்பெற்றுள்ளன.
ஜார்கண்டிலிருந்து மிகவும் முக்கியமான மாநிலமான மகாராஷ்டிராவின் ஆளுநராக சிபிஆர் மாற்றலானார். இப்பதவியில் தொடர்ந்தவருக்கு நேற்று நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் பதவி வகிக்கும் மூன்றாவது தமிழர் சிபிஆர். இவருக்கு முன்பாக தமிழர்களாக சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனுடன் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.