செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டாப் 2 வீரர்களான பாபர் அசம், முகமது ரிஸ்வான் தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும் இந்த பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியை வீழ்த்தும் திறமை உள்ளது என்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய தலைமைத் தேர்வாளருமான ஆகிப் ஜாவேத்.
செப்டம்பர் 14-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுகிறது. முன்பு போல் இந்திய – பாகிஸ்தான் போட்டிகளில் த்ரில் இல்லையென்றாலும் ‘ஹைப்’ மட்டும் வழக்கம்போல் உச்சம் பெறுகிறது.
ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபாஹீம் அஷ்ரப், ஃபகர் ஜமான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்ஸான், சஹீப் ஸாதா ஃபர்ஹான், சல்மான் மிர்ஸா, ஷாஹீன் ஷா அப்ரிடி, சுஃப்யான் மொகிம்.
பாபர் அசம் தன் ஸ்ட்ரைக் ரேட்டை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளார். இது மிகப்பெரிய தவறான முடிவாகும் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதே போல் கேப்டனாக இருந்த ரிஸ்வானை நீக்கிய காரணத்தாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
பாகிஸ்தான் அணியின் ஹெட் கோச், மைக் ஹெஸன் கூறும்போது, “பாபர் அசம் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் நன்றாக ஆடினார். ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பிவிட்டார். பாபர் அசம் சுழற்பந்து வீச்சிற்கு எதிராக ரன்களை விரைவில் குவிக்க பயிற்சி செய்ய வேண்டும். ஸ்ட்ரைக் ரேட் இன்னும் மேம்பட வேண்டும். ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிக்க அவர் உழைத்து வருகிறார்” என்றார்
இந்த அணியில் சீனியர் வீரர்கள் என்றால் பந்து வீச்சில் ஷாஹின் அஃப்ரடி, மற்றும் ஹாரிஸ் ரவூஃப், நம்பகத்தன்மை கொண்ட ஃபகர் ஜமான், குஷ்தில் ஷா உள்ளனர். விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸும் தன் இடத்தைத் தக்க வைத்துள்ளார். ஹசன் நவாஸ், சல்மான் மிர்ஸா, சுஃப்யான் மொகிம் போன்ற இளம் வீரர்களிடம் நம்பிக்கை வைத்து தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஆகிப் ஜாவேத் கூறும்போது, “இந்த அணி ஆசிய கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தும் திறமை கொண்டது. உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ இந்தியா – பாகிஸ்தான் போட்டிதான் உலகிலேயே மிகப்பெரியது. ஒவ்வொரு வீரருக்குமே இது தெரியும்.
இந்த அணி எந்த அணியையுமே வீழ்த்தும் திறமை கொண்டது. அனைத்து வீரர்களும் சவாலுக்குத் தயாராகவே உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள சூழ்நிலைகள் குறித்து இந்த வீரர்கள் அறிந்துள்ளனர். அதனால் அவர்கள் மீது கூடுதல் அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை.” என்றார்.