மும்பை: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடத் தயார் நிலையில் இருப்பதாக தேர்வுக் குழுவினரிடம் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 19-ம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடி இருந்தார். பணிச்சுமை காரணமாக அவருக்கு 2 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டது. காயம் சார்ந்த அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை கவனத்துடன் விளையாட வைத்து வருகிறது.
இந்நிலையில் ஆசியக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு தான் தயாராக இருப்பதாக தேர்வுக் குழுவினரிடம் ஜஸ்பிரீத் பும்ரா தகவல் தெரிவித்துள்ளார். இத்தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய(பிசிசிஐ) வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பிசிசிஐ நிர்வாகிகளிடம் பேசியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. வரும் 19-ம் தேதி இந்திய அணியை, தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான குழு தேர்வு செய்யவுள்ளது. இந்தக் கூட்டத்தில் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்காக கடந்த வாரமே தான் முழு தகுதியுடன் இருப்பதாகவும், ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்குத் தயாராக இருப்பதாகவும் தேர்வுக் குழுவினரிடம் பும்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறும்போது, “ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு பும்ரா ஆர்வமாக உள்ளார். அவர் போட்டியில் விளையாடுவதற்கு தயாராகி விட்டதாக தேர்வுக் குழு உறுப்பினர்களிடமும், பிசிசிஐ நிர்வாகிகளிடமும் தெரிவித்துள்ளார். வரும் 19-ம் தேதி நடைபெறும் தேர்வுக் குழுக் கூட்டத்தின்போது ஜஸ்பிரீத் பும்ரா பெயரும் பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது” என்று தெரிவித்தன.
இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்போது பும்ரா 3 போட்டிகளில் விளையாடி சிறப்பாக பந்துவீசி இருந்தார். மேலும் 2 முறை ஒரே இன்னிங்ஸில் தலா 5 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.
கடைசியாக 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியின்போது, பும்ரா இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பந்துவீசி 18 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை பும்ரா கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.