புதுடெல்லி: கொள்கை சீர்திருத்தம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல், அன்னிய நேரடி முதலீட்டை தாராளமயமாக்கியது ஆகியவற்றால் நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.
நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி 2024-25-ம் ஆண்டில் ரூ.1,50,590 கோடியாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் உற்பத்தியை விட 18 சதவீதம் உயர்வு. கடந்த 2019-20-ம் ஆண்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 90 சதவீதம் உயர்வு.
இந்த சாதனை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியதற்கு ராணுவத் தளவாட துறை மற்றும் தொழிற் துறையினரின் பங்களிப்பே காரணம். இந்த வளர்ச்சி, உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தியின் பலத்தை காட்டுவதாகவும், இறக்குமதி குறைந்து ராணுவத் தளவாட ஏற்றுமதியை அதிகரிக்கும் அளவுக்கு நாட்டை கொண்டு சென்றுள்ளது.
ஒரு நாடு தனது பாதுகாப்பு தேவையில் தன்னிறைவு பெறவில்லை என்றால், அதன் சுதந்திரம் முழுமையடையாது. நாம் ஆயுதங்களை வாங்கினால், நாம் பிற நாடுகளின் தயவில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால்தான், தற்சார்பை அடைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. தற்போது ராணுவத் தளவாடத்துறை விரிவடைந்துள்ளது, நாட்டுக்கு இதுவரை இல்லாத பலத்தை அளித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
அதிகரிப்பு மிக முக்கியம்: நாட்டின் ராணுவத் தளவாட உற்பத்தி அதிகரிப்பு , பதற்றமான நேரங்களில் வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்திருப்பதை குறைக்கும். மிக முக்கியமான ராணுவத் தளவாடங்கள் எல்லாம் விரைவில் விநியோகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணுவத் தளவாட உற்பத்தி அதிகரிப்புக்கு மத்திய அரசு மேற்கொண்ட கொள்கை சீர்திருத்தம், தனியார் துறையை ஒருங்கிணைத்தது, அன்னிய நேரடி முதலீட்டை தாராளமயமாக்கியது ஆகியவையே காரணம்.
தற்சார்பு இந்தியா திட்டம் கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தால் ராணுவ தளவாட கொள்முதல் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டன. முப்படைகளுக்கான சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டன. ராணுவத் தளவாட உற்பத்தியில் புதுமை கண்டுபிடிப்பு திட்டம் (ஐடெக்ஸ்) திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு கொண்டு ரூ.499 கோடி மதிப்பில் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டம், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களக்கு தேவையான ஆதரவை அளித்தது. இதன்மூலம் ராணுவத் தொழில்நுட்பத்தில் புதுமை கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டன. இத்திட்டம் 300-க்கும் மேற்பட்ட புதுமை கண்டுபிடிப்பாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தேவையான ஆதரவை அளிக்கிறது.
38,000-க்கும் மேற்பட்ட இறக்குமதி பொருட்கள் உள்நாட்டில் தயாரிப்பதற்கு அடையாளம் காணப்பட்டன. இவற்றில் 14,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்நாட்டில் தற்போது தயாரிக்கப்படுகின்றன. 5,500-க்கும் மேற்பட்ட ராணுவத் தளவாடங்களை உள்நாட்டில் குறிப்பிட்ட கால வரம்புக்குள் தயாரிக்க பட்டியலிடப்பட்டது. இவற்றில் துப்பாக்கிகள், ரேடார்கள், இலகு ரக ஹெலிகாப்டர்கள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.