அரியலூர் மாவட்டம் அங்கனூரை சேர்ந்தவர் திருமாவளவன் (63). இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவராகவும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி எம்பியாகவும் இருந்து வருகிறார். இவரது தாயார் பெரியம்மாவின் தங்கை செல்லம்மா.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஆக.17) காலை செல்லம்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் திருமாவளவன் வசம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது உடல் அங்கனூரில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அரசியல் கட்சியின் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு மாலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
இன்றைய தினம் திருமாவளவனுக்கு பிறந்த நாள் என்பதால் நிர்வாகிகள் பல்வேறு கிராமங்களிலும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்த நிலையில், அவரது சித்தி செல்லம்மா மறைவையொட்டி அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்: திருமாவளவனின் சித்தி மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “அன்புச் சகோதரர் தொல். திருமாவளவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கத் தொலைபேசியில் அழைத்தபோது, தனது சிற்றன்னையின் மறைவு குறித்துத் தெரிவித்தார்.
சிற்றன்னையின் மீதான அவரது பாசப்பிணைப்பையும் – அவரது மறைவு ஏற்படுத்தியிருக்கும் வேதனையையும் – உள்ளத்தில் நிறைந்திருந்த சோகத்தையும் உணர்ந்து கண்கள் கலங்கினேன். அன்புச் சகோதரர் அவர்களுக்கும் – அவரது குடும்பத்தினருக்கும் – உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
கு. செல்வப்பெருந்தகை இரங்கல்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சித்தி செல்லம்மாள் மறைவுற்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
செல்லம்மாள் அவர்கள் சமூகநீதியின் பாதையில் மகன் திருமாவளவன் உறுதியாகச் செல்வதற்கு பின்னணியாக இருந்து உற்சாகமாகவும், ஆதரவாகவும் வாழ்ந்தவர். எளிமையும் தியாகமும் கொண்ட அவரின் வாழ்க்கை எப்போதும் மறக்க முடியாததாகும்.
அவரது மறைவு, திருமாவளவனுக்கும், குடும்பத்தினருக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நண்பர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பிலும், எனது தனிப்பட்ட சார்பிலும், செல்லம்மாள் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.