சசாரம்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 17) பிஹாரில் உள்ள சசாரமில் இருந்து தனது 16 நாள் ‘வாக்காளர் அதிகார நடைபயணத்தை’ தொடங்கினார்.
இன்று தொடங்கும் இந்த யாத்திரை 1,300 கிலோமீட்டர் தூரம் பயணித்து, செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் மெகா பேரணியுடன் முடிவடையும். நிறைவுநாள் பேரணியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
தனது நடைபயணம் குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “16 நாட்கள். 20+ மாவட்டங்கள். 1,300+ கி.மீ தூரம் வாக்காளர் உரிமை நடைபயணத்துக்காக நாங்கள் மக்களிடையே வருகிறோம். இது மிகவும் அடிப்படை ஜனநாயக உரிமையான ‘ஒரு நபர், ஒரு வாக்கு’ என்பதை பாதுகாப்பதற்கான போராட்டம் ஆகும். அரசியலமைப்பைக் காப்பாற்ற பிஹாரில் எங்களுடன் சேருங்கள்,” என்று தெரிவித்தார்.
இந்த யாத்திரை இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா செய்தியாளர்களிடம் கூறினார். அவர், “ராகுல் காந்தி இதுபோன்ற ஒரு பயணத்தை மேற்கொள்ளும் போதெல்லாம், ஜனநாயகத்தின் ஒரு புதிய பக்கத்தை பார்த்துள்ளோம். இது நம் அனைவரின் இருப்புக்கான போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
இந்த நடைபயணத்தை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தொடக்க விழாவில் கலந்துகொள்கிறார். மேலும், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் இண்டியா கூட்டணியின் மற்ற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த நடைபயணத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் கண்ணையா குமார், “வாக்கு திருட்டால் அல்ல, நேர்மையுடன் நாங்கள் அரசாங்கத்தை அமைப்போம். வாக்குரிமை இல்லாவிட்டால், இந்தநாடு பிழைக்காது, வாக்குரிமையைக் காப்பாற்ற நாம் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், “ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாங்கள் பல தியாகங்களைச் செய்துள்ளோம். எதிர்காலத்திலும் நாங்கள் அதைத் தொடர்ந்து செய்வோம். எங்கள் வாக்குரிமையை நாங்கள் அழிக்க விடமாட்டோம். நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். இது அவசரநிலையின் போது இருந்ததை விட மோசமானது. ராகுல் காந்தியும் எங்களுடன் இருப்பது நல்லது” என்று கூறினார்.
பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், “ஒவ்வொரு பிஹாரியும் வாக்களிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக இந்த யாத்திரையை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்