கதுவா: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர், ஐந்து பேர் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஜோத் காட்டியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அதேபோல ஜங்லோட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களால் 5 பேர் காயமடைந்தனர். கதுவா மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல்வேறு நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ‘ மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கதுவா மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஜோத் காட் மற்றும் ஜூதானா உட்பட கதுவாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேக வெடிப்புக்குப் பிறகு கதுவாவின் வானிலை அறிவிப்பு: கதுவா மாவட்டம் முழுவதும் “கனமழை முதல் மிக கனமழை” பெய்யும் என்றும், பொதுமக்கள் நீர்நிலைகளிலிருந்து விலகி இருக்குமாறும் அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஆறுகள், ஓடைகள் மற்றும் பிற நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும், மலைப்பாங்கான மற்றும் நிலச்சரிவு மற்றும் பிற ஆபத்து நிறைந்த பகுதிகளைத் தவிர்க்கவும் பொதுமக்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். கனமழை காரணமாக, நீர்மட்டம் வேகமாக உயரக்கூடும். திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயத்தை அதிகரிக்கும். அவசர உதவிக்கு 01922-238796 மற்றும் 9858034100 எண்களை அழைக்கவும்” என்று தெரிவித்துள்ளது.
கிஷ்த்வார் மேக வெடிப்பு: ஆகஸ்ட் 14 அன்று ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மச்சைல் மாதா கோவிலுக்கு வருடாந்திர யாத்திரைக்காக சோசிட்டியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தபோது மேகவெடிப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் சிக்கிய 82 பேரை இன்னும் காணவில்லை. அப்பகுதியில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், கதுவாவிலும் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது.