தனுஷின் ‘கொடி’, அதர்வா ஜோடியாக ‘தள்ளிப்போகாதே’, ஜெயம் ரவியின் ‘சைரன்’, பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் அனுபமா பரமேஸ்வரன்.
மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து வரும் அவர் நடிப்பில் கடந்த ஆண்டு ‘தில்லு ஸ்கொயர்’ என்ற தெலுங்கு படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் அவர் நடிப்பு பாராட்டப்பட்டாலும் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் அது போன்ற கதாபாத்திரங்களில் இனி நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர், “‘தில்லு ஸ்கொயர்’ படத்தில் நான் நடித்தது போன்ற கதாபாத்திரத்தில் இப்போது நடிக்கச் சொன்னால் மறுத்து விடுவேன். என்னால் அந்த கதாபாத்திரத்தைச் சரியாகக் கையாள முடியவில்லை. அந்த கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்வது பற்றிய கேள்வியும் பதற்றமும் எனக்கு இருந்து கொண்டே இருந்தது.
தன்னம்பிக்கை இன்றிதான் அதில் நடித்திருந்தேன். என்னால் அந்த கதாபாத்திரத்தின் பலத்தைத் தாங்க முடியவில்லை. அந்த படம் முடியும் வரை, பயத்துடன் இருந்தேன். ஆனால் ரசிகர்கள் எனது கதாபாத்திரத்தைப் பாராட்டினார்கள். அது எனக்கு நிம்மதியை கொடுத்தது” என்று தெரிவித்தார்.