கெய்ன்ஸ்: மேக்ஸ்வெல்லின் அதிரடியால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
ஆஸ்திரேலியாவின் கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இளம் அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரேவிஸ் 26 பந் துகளில் 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 53 ரன்கள் விளாசினார்.
ஆரோன் ஹார்டி வீசிய 10-வது ஓவரில் மிட்விக்கெட், லாங்க் ஆன், லாங்க் ஆஃப், டீப் கவர் ஆகிய திசைகளில் சிக்ஸர் விளாசி மிரட்டினார் டெவால்ட் பிரேவிஸ். இந்த ஓவரில் மட்டும் 27 ரன்கள் விளாசப்பட்டிருந்தன.
லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 15 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 24 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்களும், ராஸி வான் டெர் டஸ்ஸன் 26 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்களும் சேர்த்தனர். தொடக்க வீரர்களான கேப்டன் எய்டன் மார்க் ரம் 1, ரியான் ரிக்கெல்டன் 13 ரன்களில் வெளியேறினர்.
ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 108 ரன்கள் குவித்து வலுவாக இருந்தது. இதன் பின்னர் டெவால்ட் பிரேவிஸ் ஆட்டமிழந்ததை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியின் ரன்குவிப்பை ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் வெகுவாக குறைத்தனர். கடைசி 9 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணியால் 64 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 4 விக்கெட்களையும் பறிகொடுத்திருந்தது.
173 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிளென் மேக்ஸ்வெல் 36 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். கேப்டனும், தொடக்க வீரருமான மிட்செல் மார்ஷ் 37 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்தார்.
டிராவிஸ் ஹெட் 19, ஜோஷ் இங்லிஷ் 0, கேமரூன் கிரீன் 9, டிம் டேவிட் 17, ஆரோன் ஹார்டி 1, பென் டுவார்ஷுயிஸ் 1, நேதன் எலிஸ் 0 ரன்களில் நடையை கட்டினர். லுங்கி நிகிடி வீசிய கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவையாக இருந்தன. முதல் பந்தில் 2 ரன்கள் சேர்த்த கிளென் மேக்ஸ்வெல் 2-வது மற்றும் 5-வது பந்துகளில் பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் போட்டியில் அந்த அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது ஆட்டத்தில் 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.
ஆட்ட நாயகனாக கிளென் மேக்ஸ்வெல்லும், தொடர் நாயகனாக டிம் டேவிட்டும் தேர்வானார்கள். டி20 தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் வரும் 19-ம் தேதி கசாலிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.