மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்துக்கு (அம்மா) நடந்த தேர்தலில் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக குக்கு பரமேஸ்வரன், பொருளாளராக உன்னி சிவபால், துணைத் தலைவர்களாக லட்சுமி பிரியா மற்றும் ஜெயன் சேர்த்தலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மலையாள நடிகர் சங்க வரலாற்றில் பெண் ஒருவர் தலைவரானது இதுதான் முதன்முறை. இந்நிலையில் நடிகை ஸ்வேதா மேனன் அளித்த பேட்டியில், “நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.
கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட நடிகை, சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தார். அவர் உள்பட ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் வந்தால் நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைவேன். ஆனால், எங்களின் உடனடி நிகழ்ச்சி நிரலில் அது இல்லை. இந்தப் பதவியின் பொறுப்புகளை நான் முழுமையாக அறிவேன். எனக்குப் பல யோசனைகள் உள்ளன.
ஆனால் என் தனிப்பட்ட முடிவுகளை அமல்படுத்த முடியாது. நிர்வாகக் குழுவில் விவாதித்த பிறகு பொதுக்குழுவின் அனுமதியுடன் முடிவுகள் செயல்படுத்தப்படும்” என்றார்.