எம்எல்ஏக்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தச் சென்றனர். அப்போது பூட்டிக் கிடந்த ஒரு அறையை உடைத்து சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல், சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனான எம்எல்ஏ ஐ.பி.செந்தில் குமாருக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். முன்னதாக, எம்எல்ஏ விடுதிக்கு வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள், செந்தில்குமாருக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைக்கு சென்றனர்.
அங்கு, அவரது அறை பூட்டப்பட்டிருந்ததால், நீண்ட நேரமாக வெளி்யே காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரமாக காத்திருந்த நிலையில், எம்எல்ஏ விடுதிக்கு வந்த சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசனுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, எம்எல்ஏ அறையை திறந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி அறையிலும் சோதனையிட வருவதாக தகவல் வெளியான நிலையில், அமைச்சரின் அறை யாரும் நுழைய முடியாதபடி பூட்டப்பட்டது.
இதனிடையே, எம்எல்ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து சோதனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினர் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.