கொல்கத்தா: நீச்சல் வீராங்கனையின் வீட்டில் இருந்து அவரது பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டன.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை புலா சவுத்ரி. இவர் 5 கண்டங்களில் உள்ள 7 கடல்களையும் நீந்தி கடந்தவர் என்ற பெருமையையும், பல்வேறு தேசிய சாதனைகளையும் படைத்தவர். இவரது சாதனைகளை பாராட்டி, மத்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்துள்ளது. 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை மேற்கு வங்க மாநிலம், நந்தப்பூர் எம்எல்ஏவாகவும் அவர் இருந்துள்ளார்.
இவரது மூதாதையர் வீடு கொல்கத்தாவின் கஸ்பா நகர் பகுதியில் உள்ளது. தற்போது இந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. இந்த வீட்டை அவரது சகோதரர் மிலன் சவுத்ரி என்பவர் பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், மிலன் சவுத்ரி அந்த வீட்டை சுத்தம் செய்ய சென்றார். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த புலா சவுத்ரியின் பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான பதக்கங்கள், நினைவுப்பரிசுகள் திருடு போனது தெரியவந்தது.
அவரது அர்ஜுனா விருது, டென்சிங் நோர்கே பதக்கத்தை மட்டும் மர்ம நபர்கள் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த புலா சவுத்ரி, உடனடியாக போலீஸில் புகார் அளித்தார்.
இதுகுறித்து புலா சவுத்ரி கூறியதாவது: எனது வாழ்நாளில் நான் வென்ற பதக்கங்கள், நினைவு பொருட்கள் அனைத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். அதன் மூலம் எந்த பணமும் அவர்களுக்குக் கிடைக்காது. திருடு போன விருதுகள் எனது பொக்கிஷங்கள். எனது வீடு தனியாக இருப்பதாலும், யாரும் அங்கு இல்லாததாலும் அடிக்கடி திருடு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது, புலா சவுத்ரி வீட்டில் நிகழ்ந்த 3-வது திருட்டு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.