புதுடெல்லி: நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது டிஜிட்டல் இறையாண்மையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நாட்டின் தொழில்நுட்ப அமைப்புகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும். டிஜிட்டல் சுயாட்சியை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆபரேட்டிங் சிஸ்டம் முதல் சைபர் பாதுகாப்பு வரை, ஆழமான தொழில்நுட்பம் முதல் செயற்கை நுண்ணறிவு வரை, அனைத்தும் நம்முடையதாக இருக்க வேண்டும்.
நமது யுபிஐ தளம் இன்று உலகையே ஆச்சரியப்படுத்துகிறது. நம்மிடம் திறமை உள்ளது. இந்தியா மட்டுமே யுபிஐ மூலம் 50% நிகழ்நேர பரிவர்த்தனைகளை செய்கிறது. நமது இளைஞர்களுக்கு நான் சவால் விடுகிறேன். வாருங்கள்.. நமக்கு ஏன் சொந்த சமூக ஊடக தளங்கள் இல்லை? நாம் ஏன் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டும்? இந்திய செல்வம் ஏன் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும்?” என்றார்.
எந்தவொரு இறையாண்மை கொண்ட நாடும் அதன் தரவு, தகவல் தொடர்பு அமைப்பை பாதுகாப்பாக வைத்திருப்பது மிக முக்கியமானது. நமது நாட்டுக்கு சொந்தமாக ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் சமூக ஊடக தளங்களை உருவாக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வரும் நிலையில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.