புதுடெல்லி: முன்னாள் பிரதமரும் பாஜகவை நிறுவிய தலைவர்களில் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சதைவ் அடலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்,மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.
வாஜ்பாய் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அடல்ஜியின் நினைவு நாளில் அவரை நினைவில் கொள்கிறேன். இந்தியாவின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கான அவரது அர்ப்பணிப்பும் சேவை மனப்பான்மையும், வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது” என்று கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி வாஜ்பாய் பிறந்தார். இந்தியப் பிரதமராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்த முதல் காங்கிரஸ் அல்லாத தலைவர் இவர்.