வாஷிங்டன்: உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் 3 மணி நேரம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனின் 22 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இருநாடுகள் இடையிலான போரை நிறுத்த முயற்சி செய்து வருகிறார்.
இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் ட்ரம்ப் 4 முறை தொலைபேசியில் ஆலோசனை நடத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்கா, ரஷ்ய அதிபர்கள் நேற்று நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆங்கரேஜ் விமான தளத்தில் தரையிறங்கிய அதிபர் புதினை, அதிபர் ட்ரம்ப் வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது வானில் அமெரிக்காவின் பி2, எப்22 ரக போர் விமானங்கள் பறந்து புதினுக்கு வரவேற்பு அளித்தன. பின்னர் இரு தலைவர்களும் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அதிபர் புதின் கூறியதாவது: உக்ரைனை எங்களுடைய சகோதர நாடாகவே கருதுகிறோம். இரு நாடுகளின் வேர்களும் ஒன்று. ஆனால் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் போர் மூண்டது. இது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.
இன்றைய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. உக்ரைனில் அமைதி திரும்ப புதிய பாதை திறந்திருக்கிறது. உக்ரைனும் ஐரோப்பிய நாடுகளும் கலந்தாலோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
ரஷ்யா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒத்துழைப்பை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இன்றைய தின பேச்சுவார்த்தையில் பல்வேறு உடன்பாடுகள் எட்டப்பட்டு உள்ளன. இதன்மூலம் உக்ரைன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அதோடு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவும் மேம்படும். உக்ரைன் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு புதின் பேசினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதாவது: இன்றைய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனினும் எவ்வித ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. உக்ரைன் விவகாரம் தொடர்பாக அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோ நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்.
அதிபர் புதினுடன் எனக்கு நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. ரஷ்யா குறித்து எதிர்மறையான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவை அனைத்தும் வெறும் வதந்திகள். உக்ரைன் போரை நாங்கள் நிறுத்தப் போகிறோம். இதுதொடர்பாக விரைவில் நாங்கள் மீண்டும் சந்தித்துப் பேசுவோம். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் பேசினார்.
இதைத் தொடர்ந்து அதிபர் புதின் கூறும்போது, ‘‘அடுத்த முறை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சந்தித்துப் பேசலாம்’’ என்று தெரிவித்தார். இதை ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகஸ்ட் 18-ம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்கிறார். அப்போது அதிபர் டொனால்டு ட்ரம்பை அவர் சந்தித்து பேச உள்ளார்.
இந்தியா மீதான வரி குறைக்கப்படுமா? – ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்புக்கு பிறகு பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்தார். அப்போது ட்ரம்ப் கூறியதாவது:
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியது தொடர்பாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை விதித்துள்ளோம். இதனால் மிகப்பெரிய வாடிக்கையாளரை (இந்தியா) ரஷ்யா இழந்திருக்கிறது. இதேபோல ரஷ்யா
விடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மீது கூடுதல் வரி விதித்தால் ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
இப்போதைய சூழலில் ரஷ்யா மற்றும் அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரியை விதிப்பது குறித்து சிந்திக்கவில்லை. அதிபர் புதின் உடனான பேச்சுவார்த்தை 100 சதவீதம் முழுதிருப்தி அளிக்கிறது. உக்ரைனில் முழுமையாக அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிபர் புதின் உடனான சந்திப்புக்கு பிறகு ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறார். எனவே இந்தியா மீதான வரிவிதிப்பில் அவர் இதே அணுகுமுறையை கடைப்பிடிப்பார் என்று நம்பப்படுகிறது.