புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம் குறித்த மிக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2010-ம் ஆண்டில் இஸ்ரேல் ராணுவம், அயர்ன் டோம் என்ற வான் பாதுகாப்பு கவசத்தை நிறுவியது. எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை அயர்ன் டோமில் இருந்து புறப்படும் ஏவுகணைகள் நடுவானில் அழித்துவிடும். இதை அடிப்படையாக வைத்து இந்தியாவின் வான் பாதுகாப்புக்காக சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம் உருவாக்கப்பட உள்ளது.
ஆபரேஷன் சிந்தூரின்போது ஆகாஷ்தீர் என்ற வான் பாதுகாப்பு கவசத்தை பயன்படுத்தினோம். தற்போது ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவசத்தில் எஸ்400 ஏவுகணைகள், பிரளயம், பிருத்வி,
ஏஏடி, ஆகாஷ், எஸ்125 பெசோரா, ஸ்பைடர், 9கே33 ஓசா, 2கே12 கப், பரக், கியூஆர்எஸ்ஏஎம், எஸ்200 ஆகிய ஏவுகணைகள் இணைக்கப்பட்டு உள்ளன. ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் பொருத்தப்பட்ட 107 வாகனங்கள் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதோடு ரேடார்கள், சென்சார்கள், உளவு செயற்கைக்கோள்கள் இணைக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய வான் பரப்பில் எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள் நுழையும்போது ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவசத்தில் பதிவாகும். எதிரியின் ஆயுதம் என்ன?, அதற்கு எந்த வகையான ஏவுகணைகளை பயன்படுத்தலாம் என்பதை ஆகாஷ்தீர் சில நொடிகளில் கணக்கிட்டு தகவல் அளிக்கும். இதன்படி எதிரிகளின் வான்வழி தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்படும்.
அடுத்தகட்டமாக ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவச திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசமாக உருவெடுக்க உள்ளது. இதையே பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் குறிப்பிட்டு உள்ளார். புதிய வான் பாதுகாப்பு கவசம் உளவு செயற்கைக்கோள்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும்.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி, பிருத்வி, கே4 உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து வகையான ஏவுகணைகளும் சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசத்துடன் இணைக்கப்படும். இதன்மூலம் வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், ரயில்வே கட்டமைப்புகள், எரிசக்தி நிலையங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கும் முழுமையான வான் பாதுகாப்பு வழங்கப்படும். வரும் 2035-ம் ஆண்டுக்குள் சுதர்சன சக்கர கவசம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும். எதிரியின் தாக்குதலை முறியடிப்பது மட்டுமன்றி எதிரியை பல மடங்கு அதிகமாக தாக்கும் வலிமையையும் புதிய வான் பாதுகாப்பு கவசம் கொண்டிருக்கும். இவ்வாறு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.