சென்னை: ‘சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்றால் தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
மண் வளத்துக்கும், இயற்கை சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்களை தமிழகம் முழுவதும் அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலா ளர் வைகோ உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தும் எந்த பலனும் இல்லாமல் உள்ளது. மாநிலம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை வெட்டி, அகற்ற ஒரே நேரத்தில் டெண்டர் விடப்படும் என தமிழக அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பாக தெரிவித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை’’ என தெரிவித்தனர்.
அப்போது அரசு தரப்பில், தமிழகம் முழுவதும் 713 கிராமங்களில் சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையைப் படித்த நீதிபதிகள், ‘‘713 கிராமங்கள் எங்கு உள்ளன? எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டன? எப்போது வெட்டப்பட்டது? அந்த இடங்களின் தற்போதைய நிலை என்ன? வெட்டிய இடங்களில் மீண்டும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதா? அதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தமிழகம் முழுவதும் எத்தனை கிராமங்கள், நகர்ப்புறங்கள் உள்ளன? அதில் 713 கிராமங்களில் மட்டும்தான் நடவடிக்கை எடுக்க முடிந்ததா?’’ என அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பியதோடு, அரசின் இந்த அறிக்கை திருப்திகரமாக இல்லை என அதிருப்தி தெரி வித்தனர்.
பின்னர் இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்றால் தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள் விசாரணையை ஆக.29-க்கு தள்ளிவைத்துள்ளனர்.