பாட்னா: பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், மக்களின் வாக்களிக்கும் உரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று குற்றம்சாட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை முதல் ’வாக்காளர் அதிகார நடைபயணம்’ தொடங்கவுள்ளார்.
இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிஹார் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், “நாளை சசாரமில் இருந்து ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்குகிறார். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து தேவையான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக இந்த யாத்திரை இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக ஓர் உத்வேகத்தை உருவாக்கும்.
இதற்காக 15 நாட்கள் பிஹாரில் தங்கும் ராகுல் காந்தி, 25 மாவட்டங்களின் வழியாக நடைபயணம் மேற்கொள்கிறார். இதில் ஆகஸ்ட் 20, 25 மற்றும் 31 ஆகிய மூன்று நாட்களில் நடைபயணம் இருக்காது.
நாளை சசாரத்தில் தொடங்கும் நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், மூன்று இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் உட்பட எங்கள் கூட்டணிக் கட்சியினரும் இணைவார்கள். செப்டம்பர் 1-ஆம் தேதி பாட்னாவில் நிறைவடையும் பேரணிக்கு, முடிந்தவரை ஒத்த எண்ணம் கொண்ட பல கட்சிகளின் தலைவர்களை அழைத்து வர முயற்சிப்போம்” என்று கூறினார்.