புதுடெல்லி: சவுதி அரேபியாவில் 1999-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை குற்றத்துக்காக 26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி விமான நிலையத்தில் ஒருவர் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.
கனரக மோட்டார் மெக்கானிக்காக பணியாற்றிய தில்ஷாத், 1999 அக்டோபரில் ரியாத்தில் தனது பணியிடத்தில் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கொலைக்குப் பின்னர் அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்று 20 ஆண்டுகளுக்கு மேலாக கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்துள்ளார்.
சவுதி அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், சிபிஐ ஏப்ரல் 2022-ல் அந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள தில்ஷாத்தின் சொந்த கிராமத்தைக் கண்டுபிடித்து, லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டனர். அதன் பின்னரும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
விசாரணையில், தில்ஷாத் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கத்தார், குவைத் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்குப் பயணம் செய்து வந்தது தெரியவந்தது. பின்னர் சிபிஐ அவரது புதிய பாஸ்போர்ட்டையும் அடையாளம் கண்டு இரண்டாவது லுக் அவுட் நோட்டீஸை வழங்கியது.
இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட்டின் மூலமாக மதீனாவிலிருந்து ஜெட்டா வழியாக புது டெல்லிக்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். 52 வயதான தில்ஷாத் தற்போது மதீனாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. தில்ஷாத் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.