புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை ஒரே சித்தாந்த குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், இரு அமைப்புகளுக்கும் இடையே எந்த மோதல்களும் இல்லை என்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், “சுதந்திர தின உரையின் போது ஆர்எஸ்எஸ்ஸின் 100 ஆண்டுகால வரலாற்றை பிரதமர் நரேந்திர மோடி அங்கீகரித்தது பாராட்டுக்குரியது. பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகிய இரு அமைப்புகளும் சித்தாந்தம் தொடர்பாகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒன்றுபட்டுள்ளன. பாஜக அரசியலில் பணியாற்றுகிறது. ஆர்எஸ்எஸ் அதற்கு வெளியே தேசத்திற்கான சமூக சேவைக்காக செயல்படுகிறது.
பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே முரண்பாடுகள் உள்ளதாக ஊகங்கள் அவ்வப்போது முன்வைக்கப்படுகின்றன. ஆனால், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஒரே சித்தாந்த குடையின் கீழ் இணைந்த இரண்டு அமைப்புகள் ஆகும். நாங்கள் ஒரே சித்தாந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நாங்கள் எப்போதும் தொடர்பில் இருக்கிறோம், எங்கள் உறவில் எந்த பதற்றமும் இல்லை.
சிலர், அரசியல் காரணங்களுக்காக, எப்போதும் ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்த்துள்ளனர், உதாரணமாக சில காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்த்தனர். ஆனால் இறுதியில் ஆர்எஸ்எஸ் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்து மதத்திற்கும் நாட்டிற்கும் வேலை செய்கிறது என்பதை அறிந்தனர். நல்லவர்களை உருவாக்கும், நல்ல மனிதர்களை உருவாக்கும் வேலையை இந்த அமைப்பு செய்து வருகிறது, அது அனைவருக்கும் தெரியும்.
நமது அமைப்பின் கீழ் மட்டங்களில், பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த அனைவருக்கும் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. எல்லா அரசியல் பின்னணிகளில் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கூறும்போது, காங்கிரஸும் அதில் அடங்கும், ஆனால் சிலர் ஆர்எஸ்எஸ்ஸை எதிர்த்தால் அரசியல் ரீதியாக பயனடையலாம் என்று நினைக்கிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார். சுதந்திர தின உரையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டி பிரதமர் மோடி பேசியதை காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.