சென்னை: தமிழகத்தில் புறவழிச் சாலைகளை தனியாரிடம் ஒப்படைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் 2021 செப்டம்பர் மாதம் சுங்கக்கட்டண உயர்வு தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது பேசியநெடுஞ்சாலைத் துறை அமைச்சர், ‘2008-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைக்கட்டண விதிகளின்படி குறைந்தபட்சம் 60 கி.மீ.-க்கு ஒரு சுங்கச்சாவடி என்பதன் அடிப்படையில், தமிழகத்தில் 16 சுங்கச் சாவடிகள்தான் இருக்க வேண்டும். இந்த விதியை மீறி பெரும்பாலான சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.
தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை மூட தமிழக அரசு முடிவெடுத்திருப்பதை மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும். முதல்கட்டமாக, 10 கி.மீ. சுற்று எல்லையில் உள்ள நெமிலி, சென்னசமுத்திரம், வானகரம், பரனூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளை உடனடியாக மூடும் திட்டம் குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டு விட்டது’ என்று தெரிவித்தார். இவ்வாறு அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், எந்த சுங்கச் சாவடியும் மூடப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், மாநில அரசின் வருவாயைப் பெருக்கும் வகையில், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலை பராமரிப்பு மற்றும் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் பணியை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும், தொடர்ந்து, நாமக்கல், இடைப்பாடி, கோவை கிழக்கு, கோவை மேற்கு, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருச்சி – கரூர், அருப்புக்கோட்டை, பெரியகுளம் – ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு புறவழிச் சாலைகளை தனியாரிடம் ஒப்படைத்து, சுங்கக்கட்டணம் வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது கண்டனத்துக்குரியது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி, புறவழிச் சாலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதை உடனடியாக ரத்து செய்யவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 32 சுங்கச் சாவடிகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.