சென்னை: ஆடி கடைசி வெள்ளியை ஒட்டி அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இம்மாதம் முழுவதும் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். குறிப்பாக, ஆடி வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவர். இந்நிலையில், ஆடி மாத கடைசி வெள்ளியான நேற்று சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதிகாலை முதலே அம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். பெண்கள் பொங்கலிட்டும், பால் குடம் எடுத்தும், கூழ் வார்த்தும், சில பகுதிகளில் அலகு குத்தியும் தங்களது நேர்த்தி க்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். மேலும், எலுமிச்சை மாலை சாற்றியும், எலுமிச்சை தீபம் ஏற்றியும் பெண்கள் வேண்டினர்.
திருவொற்றியூர் வடிவுடையம்மன், மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன், கோலவிழியம்மன், சூளை அங்காள பரமேஸ்வரி, பாரிமுனை காளிகாம்பாள், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன், முத்தமிழ் நகர் பவானி அம்மன், தி.நகர் முப்பாத்தம்மன், வில்லிவாக்கம் பாலியம்மன் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் நேற்று அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. சில கோயில்களில் திருவிளக்கு பூஜையும் நடந்தது. இதேபோல், பெருமாள் கோயில்களில் உள்ள மகாலட்சுமி சந்நிதியிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.