மதுரை: வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாக அறிவிப்பது தொடர்பாக உயர்மட்டக் குழு அமைக்க உரிய அதிகாரிகளை அணுகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த ராமலட்சுமி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாகவும், புதிய மார்க்கமாகவும் அறிவிக்கும் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பான கருத்துகள் பெற உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என தமிழக அரசு 2019 ஜூலை 31-ல் அறிவித்தது. ஆனால் இதுவரை உயர்மட்டக் குழு அமைக்கவில்லை.
எனவே, வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாகவும், புதிய மார்க்கமாகவும் அறிவிப்பது தொடர்பான கருத்துரைகளை பெற உடனடியாக உயர்மட்டக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அறநிலையத் துறை சார்பில், “உயர்மட்டக் குழு அமைப்பது தொடர்பாக அறநிலையத் துறை இணை ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். இந்தப் பரிந்துரையை ஆணையர் நிராகரித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “உயர் மட்டக் குழு பரிந்துரையை அறநிலையத் துறை ஆணையர் நிராகரித்துள்ளார். இதனால் மனுதாரர் நிவாரணம் பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகலாம். மனு முடிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.