சென்னை: மற்றவர்களைப் பார்த்து, காப்பியடித்து, வெட்டி விளம்பரம் செய்யும் வெற்று விளம்பர ஆட்சியாளர்கள் தமிழகத்திற்குத் தேவையில்லை என்று அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் நிதி அமைச்சர், 2024-ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி அன்று சமர்ப்பித்த 2024- 2025ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், பக்கம் 25ல் ‘தாயுமானவர்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்து, அதுபற்றிய விவரங்களை கீழ்கண்டவாறு விளக்கியுள்ளார்.
‘ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மன நலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறப்பு குறைபாடுடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற, சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுவதும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள் கண்டறியப்படும். ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ என்ற பெயரிலான இப்புதிய திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும்’ என்று 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்த இத்திட்டத்தை 18 மாதம் தாமதமாக, ஆட்சி முடிவடையும் தருவாயில் செயல்படுத்தியுள்ளார்.
மேலும், அறிவித்தபடி கல்வி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் வழங்குதல் என்ற எந்த வித நன்மைகளையும் வழங்காமல், 3 நாட்களுக்கு முன்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி அன்று, வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும், அத்திட்டத்திற்கு ‘தாயுமானவர்’ என்றும் பெயர் சூட்டியுள்ளார். ‘சொல்வது ஒன்று; செய்வது ஒன்று’ – இதுதான் ஸ்டாலினின் திராவிட மாடல்.
ஏற்கெனவே, எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில், 2020ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி அன்று 9 கோடி ரூபாய் செலவில் 3,501 ‘நகரும் நியாய விலைக் கடைகள்’ தமிழக எங்கும் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்படி மலைக் கிராமங்கள், தொலைதூர கிராமங்களில் பகுதி நேர நியாய விலைக் கடைகள் மற்றும் குறைந்த அளவு குடும்ப அட்டைகள் உள்ள குடியிருப்புகள் என்று தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின்படி, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள், அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரடியாக எடுத்துச் சென்று வழங்கப்பட்டது. ஏழை, எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து, வெற்று விளம்பரமின்றி, கடமை உணர்வுடன் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், அதிமுக திட்டமாகும். இப்படி எங்கள் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களுக்கு ‘காப்பி பேஸ்ட்’ செய்து, தனது பெயரை அல்லது புதுப் பெயரை சூட்டி அரசுப் பணத்தில் பல கோடி ரூபாய் செலவில் வெற்று விளம்பரங்கள் மேற்கொள்வதைத் தான் நாங்கள் ‘பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு’ என்று கூறுகிறோம்.
“தாயுமானவர்” என்று அழகிய தமிழில் பேசினால், மக்களுக்கு உங்கள் லட்சணம் தெரியாதா ? இதுவரை, மக்களுக்குத் தொடர்ந்து பலனளிக்கக்கூடிய எந்தவொரு புதிய திட்டத்தையும் இந்த அரசு அறிவிக்கவில்லை. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, நகரும் ரேஷன் கடைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. 51 மாதங்களாக எந்த புதிய திட்டத்தையும் உருவாக்க முடியாத திமுக அரசு, தேர்தல் நெருங்கியவுடன் தொடர்ந்து அதிமுகவின் திட்டங்களை தூசு தட்டி, புதிய பெயர் வைத்து விளம்பரப்படுத்துகிறது.
அதிமுக-வின் நகரும் ரேஷன் கடை திட்டத்தில் தெளிவு இருந்தது. மூன்று நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட உங்களது திட்டத்தில் ஏதேனும் தெளிவு உள்ளதா ? ரேஷன் பொருட்களை எந்த வாகனங்களில் கொண்டு செல்லப்போகிறீர்கள் ? பல இடங்களில் தனியார் வாகனங்களை பயன்படுத்துவதாகத் தகவல்கள் வருகின்றன. அவர்களுக்கு பணம் யார் வழங்குவார்கள் ? அவர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா ? டெண்டர் விவரங்களை வெளியிடுவீர்களா ? 30 கோடி ரூபாய் செலவு என நீங்களே கூறி இருக்கிறீர்கள். இந்தத் தொகை யாருக்கு செல்கிறது ? தனியார் வாகன உரிமையாளர்களுக்கா ? திமுக-வினருக்கா ? அல்லது விளம்பரச் செலவிற்கா ?
பொது விநியோகத் துறையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்து, நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கும் அவல நிலையில் உள்ள இந்த அரசு, “தாயுமானவர்” என்று அழகிய தமிழில் பேசினால், மக்களுக்கு உங்கள் லட்சணம் தெரியாதா? 2024 – 25 நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளை உள்ளடக்கிய ‘தாயுமானவர்’ திட்டம் வேறா? தற்போது ஸ்டாலின் துவக்கியுள்ள ரேஷன் பொருட்களை முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் நேரடியாக வழங்கும் இத்திட்டம் வேறா ?
மற்றவர்களைப் பார்த்து, காப்பியடித்து, வெட்டி விளம்பரம் செய்யும் வெற்று விளம்பர ஆட்சியாளர்கள் தமிழகத்திற்குத் தேவையில்லை. சொந்தமாக சிந்தித்து, மக்களின் தேவைகளை உணர்ந்து, திட்டங்களை தீட்டுபவர்களே தமிழகத்திற்குத் தேவை. ஆட்சி முடியும் தருவாயில், தேர்தலை மனதில் வைத்து தமிழக மக்களின் வரிப் பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வெற்று விளம்பரங்களுக்காக செலவழித்து, தனது புகைப்படத்தை விளம்பரம் செய்தாலும், வரும் 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக மக்கள் ‘காப்பி பேஸ்ட்’ பெயிலியர் மாடல் திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது உறுதி.“ என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.