விருதுநகர்: சுதந்திரத்திற்காக போராடியவர்களை கவுரவிக்க வேண்டிய நாள். ஆனால், அந்நாளில் பிரதமர் ஆர்எஸ்எஸ் குறித்து பேசியது சுதந்திரத்திற்காக போராடியவர்களை அசிங்கப்படுத்தும் செயல். என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து விருதுநகரில் இன்று அவர் அளித்த பேட்டியில், “தேச கட்டுமானத்திற்காக ஆர்எஸ்எஸ்காரர்கள் பாடுபட்டார்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். சுதந்திரத்திற்காகப் போராடிய மகாத்மா காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் படேல், காமராஜர், கொடிகாத்த குமரன் ஆகியோரை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது. சுதந்திரத்திற்கான எந்த போராட்டத்திலும் ஆர்எஸ்எஸ் பங்கேற்றது இல்லை. இன்று சுதந்திரத்திற்காக போராடியவர்களை கவுரவிக்க வேண்டிய நாள். ஆனால், ஆர்எஸ்எஸ் குறித்து பேசியது சுதந்திரத்திற்காக போராடியவர்களை அசிங்கப்படுத்தும் செயல்.
தீபாவளி பரிசாக வரி குறைப்பு என்று கூறியுள்ளதை பொருத்திந்து பார்ப்போம். இந்த ஆட்சி தனிப்பெரும்பான்மையை இழந்து கூட்டணி ஆட்சியாக மாறியுள்ளதற்கு காரணம் மோடியின் கொள்கைகள்தான். விவசாயிகளைப் பற்றியோ,சிறு வியாபாரிகளைப் பற்றியோ மோடிக்கு கவலை இல்லை.
தமிழக ஆளுநர் ரவி, ஆளுநர் பதவிக்கான நடுநிலையை இழந்துவிட்டார். பாஜககாரர் போல் செயல்படுகிறார். எதிர்ப்பு மக்கள் இயக்கமாக மாறினால், மத்திய அரசு ஆளுநர் ரவியை மாற்றிவிடும். 13 நாள் போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்களை இரவில் காவல்துறை கைது செய்திருக்கக் கூடாது. காவல்துறை செயல் தவறானது. தமிழக முதல்வர் இதில் தலையிட வேண்டும். தொழிலார்களை அவமானப்படுத்தி இரவில் கைதுசெய்துள்ளதில் காவல்துறை மிகப்பெரிய தவறு செய்துள்ளது.
தொழில் நிறைந்த விருதுநகரில் லாரி முனையம், கண்டெய்னர் முனையம் அமைக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விருதுநகருக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்போம். பிஹாரில் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டையை ஏற்க மாட்டோம் என்று தேர்தல் ஆணையம் கூறியது. பாஸ்போர்ட், வாரிசு சான்று கொடுக்க வேண்டும் என்று கூறியது. இதுகுறித்து நாடாளுமன்றத்தை முடுக்கி கேள்வி எழுப்பினோம்.
பிஹாரில் தோற்றுவிடுவோம் என்பதால் தேர்தல் ஆணையத்தோடு சேர்ந்து பாஜக செய்த சதி. தேர்தல் ஆணையம் பாஜகவின் கைக்கூலியாக செயல்படுகிறது. அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் திமுகவுக்குச் சென்றுள்ளனர். அதிமுக அமித்ஷா கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டது. அதிமுக, அமித்ஷா திமுகவாக மாறிவிட்டது. இண்டியா கூட்டணி பலமாக உள்ளது. பெங்களூரில் 8 சட்டமன்றத் தொகுதிகளில் 7 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஒரு சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வெற்றிபெற்றுள்ளது.
இதற்காக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் பட்டியலையும் டிஜிட்டல் செய்து வருகிறோம். 303 இடங்களிலிருந்து 240 ஆக மக்கள் குறைந்தார்கள். 48 தொகுதிகளில் முறைகேடு செய்து பாஜக வெற்றிபெற்றது. ராகுல்காந்தி 17ஆம் தேதி குஜராத்தில் வாக்கு ரத யாத்திரை நடத்த உள்ளார். இப்போராட்டத்திற்கு அனைவரது ஆதரவும் வேண்டும்’ என்றார்.