புதுடெல்லி: ஆளும் பாஜக ஆட்சியில் நீடிக்க எந்த அளவிற்கான நேர்மையற்ற செயலை செய்யவும் தயாராக உள்ளது. தேர்தல்களில் பெரிய அளவிலான முறைகேடுகள் தற்போது வெளிச்சத்துக்கு வருகின்றன என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்தார்.
79-வது சுதந்திர தினமான இன்று புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான இந்திரா பவனில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேசியக் கொடியை ஏற்றினார்.
இதனை தொடந்து பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்தில் நீடிக்க எந்த அளவுக்கான நேர்மையற்ற செயலை செய்யவும் தயாராக உள்ளது. பிஹார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் எதிர்க்கட்சி வாக்குகள் வெளிப்படையாகக் குறைக்கப்படுகிறது. பிஹாரில் 65 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு பாஜகவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனவே இதனால் யார் பயனடைகிறார்கள் என்பது தெரிகிறது.
இது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான போராட்டம் அல்ல, இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றவும் அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் நடக்கும் போராட்டம். இப்போது ஆளும் கட்சி ஆட்சியில் நீடிக்க எந்த அளவிற்கான நேர்மையற்ற செயலை செய்யவும் தயாராக உள்ளது. தேர்தல்களில் பெரிய அளவிலான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
கர்நாடகாவில் நடந்த முறைகேடுகள் போல, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எனவே கட்சி அத்தகைய இடங்களை உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறது. சரியான நேரத்தில், இது பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படும்.
காங்கிரஸ் தொண்டர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலைப் பெற்று விவரங்களை நுணுக்கமாகச் சரிபார்க்க வேண்டும். சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக எத்தனை பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன அல்லது இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன அல்லது வேண்டுமென்றே வேறொரு வாக்குச் சாவடிக்கு மாற்றப்பட்டுள்ளன என்பதைச் சரிபார்க்கவும். எத்தனை வெளியாட்களின் பெயர்கள் சேர்க்கப்படுகின்றன? அல்லது ஒரே வாக்காளர் அடையாள அட்டை பல முறை சேர்க்கப்பட்டுள்ளன என சரிபார்க்கவும்.
கடந்த 11 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசில் வேலையின்மை அதிகரிக்கிறது. உள்கட்டமைப்பு மேம்பாடு என்ற பெயரில் தரமற்ற மற்றும் மோசமான தரத்திலான கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மகாத்மா காந்தி, பண்டிட் நேரு, சர்தார் படேல், பி.ஆர். அம்பேத்கர், மௌலானா ஆசாத் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் போன்ற தலைவர்களின் கனவுகளை இப்படி சிதைக்க நாம் அனுமதிக்க முடியாது. சுதந்திரத்திற்காக நாம் போராடிய அதே தீவிரத்துடன் இந்தப் போரில் நாம் போராட வேண்டும்” என்று கார்கே கூறினார்.