50 ஆண்டு கால திரையுலக பயணத்துக்கு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இதற்கு அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் ரஜினிகாந்த், “அனைவருக்கும் 79-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும், கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினியின் 50 ஆண்டுகள் நிறைவு பெறும் வேளையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ வெளியாகியுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், டிசம்பர் 12-ம் தேதி தனது பிறந்த நாளன்று தனது சுயசரிதையையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் ரஜினி.