புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 12-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார். அப்போது சுமார் 103 நிமிடங்கள் அவர் உரையாற்றினார்.
இதுவரையிலான அவரது சுதந்திர தின உரையில் இது நீண்டதாகும். முன்னாள் பிரதமர் நேருவுக்கு அடுத்ததாக அதிக சுதந்திர உரையாற்றி பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார். அவரது சுதந்திர தின உரை ஹைலைட்ஸ் குறித்து பார்ப்போம்.
“முன்பு செமிகண்டக்டர் தொழிற்சாலைகளை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவே இல்லை. அதே நேரத்தில் மற்ற நாடுகள் அதில் செழித்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியா இப்போது இதில் தீவிரமாக இயங்குகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், நம் நாடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சிப்பை வெளியிடும்.
அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் அணுமின் உற்பத்தி திறனை பத்து மடங்குக்கு மேல் அதிகரிக்கும் பணியின் ஒரு பகுதியாக, 10 புதிய அணு உலைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள் தீபாவளியன்று வெளியிடப்படும். அது அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்து, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், உள்ளூர் விற்பனையாளர்கள், நுகர்வோர் ஆகியோருக்குப் பயனளிக்கும்.
சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக ஒரு பிரத்யேக சீர்திருத்த பணிக்குழுவை உருவாக்க உள்ளோம். இது பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், நடைமுறை சிக்கல்களைக் குறைத்தல், நிர்வாகத்தை நவீனப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஒரு பெரிய வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்குகிறோம். இதன் கீழ் புதிதாகப் பணியில் இணையும் இளைஞர்கள் ரூ.15,000 பெறுவார்கள். இந்தத் திட்டம் 3 கோடி இளம் இந்தியர்களுக்கு பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் ஊடுருவல், சட்டவிரோத இடப்பெயர்வு ஆகியவை காரணமாக மக்கள்தொகை ஏற்றத்தாழ்வின் ஆபத்துகளை கவனிக்க வேண்டி உள்ளது. இந்த தேசிய பாதுகாப்பு சவாலை எதிர்கொள்ளவும், நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, உரிமைகள் ஆகியவை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் உயர் அதிகாரம் கொண்ட மக்கள்தொகை ஆய்வு இயக்கத்தைத் தொடங்குகிறோம்.
பட்ஜெட்டில் பெரும் பங்கு இன்னும் பெட்ரோல், டீசல், எரிவாயு இறக்குமதிக்கு செல்கிறது. சூரிய சக்தி, ஹைட்ரஜன், நீர் மின்சக்தி, அணுசக்தி ஆகியவற்றில் பெரிய விரிவாக்கங்களுடன், கடல் வளங்களைப் பயன்படுத்த தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தை தொடங்குகிறோம்.
கரோனா காலத்தில் தடுப்பூசிகள் தயாரித்தது போலவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ உருவாக்கப்பட்டது போலவும், சொந்தமாக ஜெட் இன்ஜின்களை உருவாக்க வேண்டும். நமது விஞ்ஞானிகள், இளைஞர்கள் அதை நேரடி சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.