புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது துணிச்சலுடன் போரிட்ட, எல்லை பாதுகாப்பு படையின் 16 அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு வீர தீர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு துணிச்சலுடன் செயல் ஆற்றிய வீரர்களுக்கு வீர தீர விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. கடந்த மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பாகிஸ்தானின் பல பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டனர். இவற்றை எல்லை பாதுகாப்ப படையினர் மற்றும் இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், எல்லைப் பாதுகாப்பு படையைச் (பிஎஸ்எப்) சேர்ந்த ஒரு துணை கமாண்டன்ட், 2 உதவி கமான்டன்ட், ஒரு ஆய்வாளர் உட்பட 16 பேர், இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் துணிச்சலான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவருக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீர தீர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பிஎஸ்எப் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ நாட்டின் பாதுகாப்பில் முன்னணியில் இருந்து செயல்படும் எல்லை பாதுகாப்பு படை மீது, நாடு வைத்துள்ள நம்பிக்கைக்கு இந்த பதக்கங்களே சாட்சியம்’’ என தெரிவித்துள்ளது.
1090 காவலர் பதக்கங்கள்: நாடு முழுவதும் மத்திய ஆயுத படைகள் மற்றும் மாநிலங்களில் பணியாற்றும் சீருடை பணியாளர்களில் சிறப்பாக பணியாற்றிய 1090 பேருக்கு, சுதந்திர தினத்தை முன்னிட்டு காவலர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் 233 பேருக்கு வீரதீர பதக்கங்களை வழங்கியுள்ளது. சிறப்பாக பணியாற்றி 99 பேருக்கு குடியரசு தலைவரின் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. போற்றத்தக்க வகையில் பணியாற்றிய 758 பேருக்கும் சிறப்பு சேவை பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தீயணைப்புத்துறை, ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்களும் இதில் இடம்பெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 152 விருதுகள், ஜம்மு காஷ்மீரில் பல்வேறு ஆபரேஷன்களில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நக்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்ட 54 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கு மாநிலங்களில் சிறப்பாக பணியாற்றிய 3 பேருக்கும், நாட்டின் இதர பகுதிகளில் சிறப்பாக பணியாற்றிய 24 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. தீயணைப்புபடையைச் சேர்ந்த 4 வீரர்களுக்கும்,
ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவருக்கும் வீர தீர விருது அறிவிக்கப்பட்டுள்ளது.