பெரம்பலூர்: “தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை விசிக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மீது பதிவு செய்த வழக்கை திரும்பப் பெற வேண்டும். தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு வழங்குவதாக அறிவித்துள்ள திட்டங்களை நான் வரவேற்கிறேன். இந்த பணி நிரந்தர கோரிக்கை திமுக ஆட்சியில் மட்டுமில்லை. அதிமுக ஆட்சியில் இருந்து தொடர்ந்து வருகிறது. ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் 11 மண்டலங்களின் தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் 4 மண்டலங்கள் உள்ளன. அதில் 2 மண்டலங்களை தனியார் மயமாக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை அரசு திரும்ப பெறவேண்டும்.
திருநெல்வேலியில் நடந்த பட்டமளிப்பு விழாவின்போது மாணவி ஒருவர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்துத்துள்ளார். திராவிட சித்தாந்தத்தின்படி இதுபோன்று அந்த மாணவி நடந்து கொண்டதாக கூறியுள்ளார். இதை நான் ஏற்று கொண்டாலும், சபை மரபை அந்த மாணவி மீறி இருக்கக் கூடாது.
தமிழையும், தமிழ் மக்களையும் ஆளுநர் அவமதித்து பேசி வருகிறார். இதனால் அவரது தேநீர் விருந்தை நாங்கள் புறக்கணிக்கிறோம். தூய்மைப் பணியாளர்களை தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு அழைத்து பேசி இருக்கக் கூடாது. ஜனநாயக முறைப்படி தலைவர்கள் தான் மக்களை தேடி செல்ல வேண்டும். இதை விஜய் கற்றுக் கொள்ளவில்லை. இதை காலம் அவருக்கு கற்று கொடுக்கும்” என்று அவர் கூறினார்.