புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலியான பாரிமேட்சின் ரூ.110 கோடி வங்கி நிதியை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை இயக்குநரகம் நேற்று கூறியுள்ளதாவது: சைப்ரஸ் நாட்டை தளமாகக் கொண்ட பாரிமேட்ச் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளத்தின் இந்திய செயல்பாடுகளுக்கு எதிராக சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரிமேட்ச் தொடர்புடைய மோசடி வங்கி கணக்குகளில் முதலீட்டாளர்கள் டெபாசிட் செய்திருந்த ரூ.110 கோடி முடக்கப்பட்டுள்ளது. மேலும், 1,200 கிரெடிட் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாரிமேட்ச் சூதாட்ட செயலியில் முதலீட்டாளர்கள் டெபாசிட் செய்த தொகை நாடு முழுவதும் வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி போலி வங்கிக் கணக்குகள் மூலம் வெளிநாடுகளுக்கு திருப்பிவிடப்பட்டு பல ஆயிரம் கோடி மோசடி நடைபெற்றுள்ளது. இவ்வாறு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
பாரிமேட்ச் செயலியானது விளையாட்டு போட்டிகளின் ஸ்பான்சர்ஷிப் மூலமாக இந்தியாவில் பிரபலமானது. அதிக வருமானம் ஈட்டித் தருவதாக கூறி முதலீட்டாளர்களை ஏமாற்றி ஒரு வருடத்தில் மட்டும் ரூ.3,000 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அதன் செயல்பாடுகளுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 12-ம் தேதி மும்பை, நொய்டா, ஜெய்ப்பூர், சூரத், மதுரை, கான்பூர், ஹைதராபாத் உள்ளிட்ட 17 இடங்களில் அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டது. அப்போது ஒரே வளாகத்தில் இருந்து மட்டும் 1,200 -க்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.