முதல் நாள் டிக்கெட் முன்பதிவில் ‘லியோ’ படத்தை விட ‘கூலி’ படத்துக்கு குறைவாகவே பதிவாகி இருக்கிறது.
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் உலகமெங்கும் ஆகஸ்ட் 14-ம் தேதி அன்று வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்னரே பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் டிக்கெட் முன்பதிவில் சாதனை புரிந்தது. இதனால் முதல் நாள் வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கருதினார்கள்.
தற்போது புக்மை-ஷோ தளத்தில் முதல் நாளுக்கான டிக்கெட் முன்பதிவு என்னவென்று தெரியவந்துள்ளது. அதன்படி ‘கூலி’ படத்துக்கு முதல் நாள் பதிவில் 717K டிக்கெட்கள் புக் செய்யப்பட்டுள்ளது. இது ‘லியோ’ படத்தை விட குறைவாகும். முதல் நாளில் ‘லியோ’ படத்துக்கு 751K டிக்கெட்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு முதல் இடத்தில் இருக்கிறது. இதனை ‘கூலி’ முறியடிக்கவில்லை.
ஆனால், பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் ‘லியோ’ செய்த சாதனைகள் அனைத்தையும் ‘கூலி’ முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் நாள் வசூலை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது. அது கண்டிப்பாக ‘லியோ’ படத்தை விட அதிகமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.