பாட்னா: பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து வெளியேறுவது குறித்து தான் நினைத்து கூட பார்க்க முடியாது என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ் அணி) தலைவரான சிராக் பாஸ்வான் மாநில அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியானது. அவரது கட்சியின் செயல்பாடும், அவரின் பேச்சும் அதை வெளிப்படுத்தின. விரைவில் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அவரது அரசியல் நகர்வு மாநிலம் சார்ந்து இருக்கலாம் என கருதப்பட்டது.
இந்தச் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அவரது கட்சி வெளியேறப் போவதாக தகவல் வெளியானது. தற்போது அதை சிராக் பாஸ்வான் மறுத்துள்ளார். “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்னை விலக்கி வைக்கும் நோக்கில் இது மாதிரியான தகவல் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.
கடந்த 2020-ல் நிலவிய அரசியல் சூழல் வேண்டுமென காங்கிரஸ் கட்சி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி விரும்புவதாக நான் கருதுகிறேன். என்னை என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிப்பதன் மூலம் தங்கள் பாதையை சுலபமாக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. எல்லோருக்கும் நான் மீண்டும் சொல்லிக் கொள்வது ஒன்று மட்டும்தான். அது பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து நான் நினைத்து கூட பார்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்): எல்ஜேபி(ஆர்வி) கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிராக் பாஸ்வான் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இக்கட்சிக்கு பட்டியல் சமூக வாக்குகள் பெருமளவில் உள்ளது. எனவே கடந்த கால தேர்தல்களில் இக்கட்சி பெரும் தாக்கத்தை உருவாக்கியது.
2020 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட எல்ஜேபி, ஒரு தொகுதியில் மட்டுமே வென்ற போதிலும், பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயித்தது.
2020 தேர்தலில் எல்ஜேபி தனித்துப் போட்டியிட்டு ஒன்பது இடங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தாலும், 93 இடங்களில் மூன்றாவது இடத்தையும், 32 இடங்களில் நான்காவது இடத்தையும் பிடித்தது. அக்கட்சி 13 இடங்களில் 20% முதல் 30% வாக்குகளைப் பெற்றது, 43 இடங்களில் 10% முதல் 20% வாக்குகள் மற்றும் 77 இடங்களில் 10% க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றது.
அப்போது எல்ஜேபி என்டிஏ கூட்டணியில் இருந்திருந்தால் கூடுதலாக 27 இடங்களை வென்றிருக்கலாம். அதேபோல எல்ஜேபியால் ஆர்ஜேடி, காங்கிரஸின் மகாகத்பந்தன் 31 இடங்களில் தோற்றது. அந்த 31 இடங்களில் வென்றிருந்தால் மகாகத்பந்தன் 122 இடங்களை வென்று ஆட்சியமைத்திருக்கும். 2024 மக்களவைத் தேர்தலில் என்டிஏ அணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட எல்ஜேபி(ஆர்வி) அனைத்து இடங்களையும் வென்றது. எனவே இக்கட்சி 2025 சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கிய கட்சியாக உருவெடுத்துள்ளது.