சென்னை ராயப்பேட்டையில் மேன்சன் நடத்தி வரும் தேவாவுக்கு (ரஜினிகாந்த்), தனது நண்பன் ராஜசேகர் (சத்யராஜ்), விசாகப்பட்டினத்தில் மரணமடைந்திருப்பது தெரிய வருகிறது. இறுதி அஞ்சலி செலுத்த அங்கு செல்லும் தேவாவுக்கு, ராஜசேகரின் மரணம், இயற்கையானதல்ல என்பது புரிகிறது. அதற்கு, கடத்தல் தொழில் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சைமனும் (நாகார்ஜுனா) அவனுடைய வலது கை, தயாளனும் (சவுபின் சாஹிர்) காரணமாக இருக்கிறார்கள். அவர்களைத் தேவா என்ன செய்கிறார்? தேவாவுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு, சைம
னுக்கும் தேவாவுக்குமான முன் கணக்கு என்ன? என்பது கதை.
ஒரு கமர்ஷியல், ஆக் ஷன் மசாலா படத்துக்கு என்னவெல்லாம் தேவையோ, அது அனைத்தையும் பக்காவாக கலந்து, தனது முந்தைய படங்களைப் போலவே ‘கூலி’யையும் கொடுத்திருக்கிறார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ். லாஜிக்கைதூர வைத்துவிட்டு, அவர் படங்களில் வரும் ரசனையான பழைய ஹிட் பாடல்கள், மிரட்டலான சண்டைக் காட்சிகள், ஏராளமான துணை நடிகர்கள், முன் பின்னான கதை சொல்லல் என இதிலும் தொடர்கிறது, அதே லோகேஷ் ஸ்டைல்.
ரஜினியின் அசத்தலான என்ட்ரியுடன் படம் தொடங்கும்போதே நமக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடுகிறது. அது நகர்ந்து நகர்ந்து ஒரு பழிவாங்கும் கதையாக மாறும்போது, ‘இது அதுவல்ல’ என்று வேறொரு குற்றச் சம்பவத்துக்குத் தாவுகிறது, திரைக்கதை. இடைவேளைக்கு முன் கொஞ்சம் மெதுவாகச் சென்றாலும் இரண்டாம் பாதி திரைக் கதையை, ‘டைட்’டாக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர்.
முதல் பாதியில், அப்பாவியாக வந்து போகும் கதாபாத்திரங்களுக்கு, பின் பாதியில் வைத்திருக்கும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டுகள், ரசிக்க வைப்பதோடு கதை மீதான ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.முழு திரையையும் ஆக்கிரமித்திருக்கும் ரஜினி, இந்த வயதிலும் எனர்ஜியுடன் நடித்திருக் கிறார். சண்டைக் காட்சிகளில் அவர் ஸ்டைல் பளிச்சிடுகிறது. அவருக்கும் சத்யராஜுக்குமான ‘டீ ஏஜிங்’ பிளாஷ்பேக் காட்சி, ‘பவர் ஹவுஸ்’ விருந்து. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, மாஸ் காட்சிகளை ஆங்காங்கே தூவி இருப்பதும் ரசிக்கும்படி இருக்கிறது.
முரட்டுத்தனமான வில்லனாக, இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார், சவுபின் சாஹிர். அவர் கதாபாத்திரம் வலுவாக எழுதப்பட்டிருக்கிறது. ரஜினியை அடுத்து அவருக்குத்தான் முக்கியத்துவம் என்பதால் அதைச் சரியாகவே பயன்படுத்தி இருக்கிறார். மூன்று மகள்களை வளர்க்கும் தந்தையாக, இயல்பாக வருகிறார் சத்யராஜ். சைமனாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா, ஸ்டைலாக இருக்கிறார். ப்ரீத்தியாக ஸ்ருதி ஹாசன், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். உபேந்திரா, ஆமிர்கான் ஆகியோரின் ‘கேமியோ’கள் கதையோடு பொருந்துகின்றன. சார்லி, கண்ணா ரவி, ரச்சிதா ராம் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள், தங்களுக்கான பங்களிப்பைக் குறையின்றிச் செய்திருக்கிறார்கள்.
டெக்னிக்கலாக மிரட்டும் ‘கூலி’க்கு அனிருத் ரவிச்சந்தரின் ‘மோனிகா’ பாடல் திரையரங்கில் விசில் பறக்கும் உற்சாகத்தைத் தருகிறது. பின்னணி இசையும் கதையோடு ஒன்ற வைக்கிறது. கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவில் விசாகப்பட்டினம் துறைமுகக் காட்சிகளும் அந்த ரயிலில் நடக்கும் சேஸிங் காட்சியும் ஈர்க்கின்றன.
படத்தில் வெட்டுக் குத்து என ஏகப்பட்ட வன்முறைக் காட்சிகள். படம் முழுவதும் அடியாட்களைக் கொல்வது, பிணங்களை எரிப்பது, புதுமையில்லாத திரைக்கதை ஆகியவை ஒரு கட்டத்தில் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. படத் தொகுப்பாளர் பிலோமின் ராஜ், படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருந்தால் இன்னும் மாஸாக ரசித்திருக்கலாம்.