சென்னை: சான் அகாடமியின் 7-வது சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த தொடரில் சிறுவர் பிரிவில் 27 அணிகளும், சிறுமியர் பிரிவில் 16 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.
இதில் ஆடவர் இறுதிப் போட்டியில் பெரம்பூர் டான் போஸ்கோ 20-25, 25-23, 25-23 என்ற செட் கணக்கில் முகப்பேர் வேலம்மாள் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. 3-வது இடத்தை மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியும், 4-வது இடத்தை ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் அணியும் பெற்றன.
சிறுமியர் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மெக்டலின் 25-18, 25-7 என்ற செட்கணக்கில் நுங்கம்பாக்கம் வித்யோதயா மெட்ரிக் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. 3-வது இடத்தை சென்னை மேல்நிலைப் பள்ளியும், 4-வது இடத்தை அண்ணா நகர் ஜெசி மோசஸ் பள்ளியும் கைப்பற்றின.
பரிசளிப்பு வழாவில் தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவராம், தெற்கு ரயில்வே அதிகாரி சுனிதா, சான் அகாடமி பள்ளி முதல்வர் ஹேமலதா, சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் துணை தலைவர் தினகர், செயல் தலைவர் ஜெகதீசன், பொருளாளர் பழனியப்பன், செயலாளர் கேசவன், முன்னாள் துணை தலைவர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
- செய்தி துளிகள்: 1972-ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணியில் இடம் பெற்றிருந்தவரும், புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸின் தந்தையுமான வெஸ் பயஸ், வயது முதிர்வு காரணமாக நேற்று கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 80.
- சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் திருவள்ளூர் பிரீமியர் ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ஜிஎஸ்டி அணி 6-3 என்ற கோல் கணக்கில் மோஸ்கோ மேஜிக் அணியை தோற்கடித்தது.
- ஆகஸ்ட் 18-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ள புச்சிபாபு கிரிக்கெட் தொடருக்கான மகாராஷ்டிரா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கித் பாவனே தலைமையிலான அணியில் ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
- புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளும் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணிக்கு பிரதோஷ் ரஞ்ஜன் பால் கேப்டனாகவும், டிஎன்சி லெவன் அணிக்கு ஷாருக்கான் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பையில் நேற்று பிஎஸ்ஜி – டோட்டன்ஹாம் அணிகள் பாரிஸ் நகரில் மோதின. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து நடைபெற்ற பெனால்டி ஷூட்அவுட்டில் பிஎஸ்ஜி அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.