சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு சிறப்பு பதக்கங்களை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, உள்துறை செயலர் தீரஜ் குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல் துறை அதிகாரிகள், 2025-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் பெயர் விபரம்: சென்னை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சைபர் கிரைம் செல் பிரிவு, காவல் துணை கண் காணிப்பாளர் பூரணி, திருநெல்வேலி குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, காவல் ஆய்வாளர் உலகராணி, சென்னை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் லதா, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் செந்தில் குமார், தஞ்சாவூர் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை துணை காவல் கண்காணிப்பாளர் கல்பனாதத், திண்டுக்கல் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, காவல் ஆய்வாளர் சந்தானலட்சுமி, திருப்பூர் மாவட்டம், பெரு மாநல்லூர் காவல் நிலைய, காவல் ஆய்வாளர் வசந்தகுமார், திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய, காவல் ஆய்வாளர் ஜெகநாதன், அரியலூர், குற்றப்புலனாய்வுத் துறை, காவல் ஆய்வாளர் திலகாதேவி, நாகப்பட்டினம், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி.
இதே போன்று, பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல் துறை அதிகாரிகளுக்கு, 2025-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, சிறைத்துறை கூடுதல் டிஜிபி மஹேஷ்வர் தயாள், நுண்ணறிவு பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு ) டிஐஜி மகேஷ், திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், சென்னை தலைமையக தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரவின்குமார், சென்னை காவல் ஆய்வாளர் மேரிரஜு ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருதுகள் முதல்வரால் மற்றொரு விழாவில் வழங்கப்படும்.