சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 8-வது நாளான நேற்று 8-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
புள்ளிகள் பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் எஞ்சிய இரு சுற்றுகளையும் டிராவில் முடித்தாலே சாம்பியன் பட்டம் வென்றுவிடலாம் என்ற சூழ்நிலையில் 8-வது சுற்று ஆட்டத்தில், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்டுடன் மோதினார்.
வின்சென்ட் கீமர் வெள்ளை காய்களுடனும், ஜோர்டன் வான் பாரஸ்ட் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். இந்த ஆட்டம் 59-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் 6 புள்ளிகளை பெற்றுள்ள வின்சென்ட் கீமர், இன்னும் ஒரு சுற்று மீதம் உள்ள நிலையில் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்தார்.
ஏனெனில் புள்ளிகள் பட்டியலில் அவருக்கு அடுத்தபடியாக இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி 4.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இன்று நடைபெறும் கடைசி சுற்றில் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட மற்ற எந்த வீரர்களும் தங்களது ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் வின்சென்ட் கீமரின் புள்ளியை தொட முடியாது.
சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ள வின்சென்ட் கீமர், லைவ் செஸ் ரேட்டிங்கில் 2746.5 புள்ளிகளுடன் 11 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இன்று நடைபெறும் கடைசி சுற்றில் வின்சென்ட் கீமர், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ரே ராப்சனுடன் மோதுகிறார்.
நெதர்லாந்தின் அனிஷ் கிரி – அமெரிக்காவின் அவாண்டர் லியாங், இந்திய கிரண்ட் மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி – விதித் குஜராத்தி, இந்தியாவின் வி.பிரணவ் – அமெரிக்காவின் ரே ராப்சன், இந்தியாவின் கார்த்திகேயன் முரளி – நிஹால் சரின் ஆகியோர் மோதிய ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்தன.
முழுமையாக இந்திய வீரர்கள் கலந்து கொண்டுள்ள சேலஞ்சர்ஸ் பிரிவு 8-வது சுற்றில் சர்வதேச மாஸ்டரான ஜி.பி.ஹர்ஷ்வர்தன், கிராண்ட் மாஸ்டரான அதிபன் பாஸ்கரனுடன் மோதினார். இதில் 81-வது நகர்த்தலின் போது அதிபன் பாஸ்கரன் வெற்றி பெற்றார்.
ஹரிகா துரோணவல்லி, எம். பிரனேஷுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் எம்.பிரனேஷ் 42-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், 6.5 புள்ளிகளுடன் முத லிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார். அபிமன்யு புராணிக், திப்தாயன் கோஷுடன் மோதினார். இதில் 68-வது நகர்த்தலின் போது அபிமன்யு புராணிக் வெற்றி பெற்றார். இதன் மூலம் 6 புள்ளிகளுடன் அவர், 2-வது இடத்துக்கு முன்னேறினார்.
லியோன் லூக் மென்டோன்கா, பா.இனியன் மோதிய ஆட்டம் 34-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதன் மூலம் லியோன் லூக் மென்டோன்கா 6 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு இறங்கினார். ஆர்.வைஷாலி, ஆர்யன் சோப்ராவை எதிர்கொண்டார். இதில் ஆர்யன் சோப்ரா 64-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இன்று கடைசி சுற்று நடைபெறுகிறது. இதில் சேலஞ்சர்ஸ் பிரிவில் பட்டம் வெல்வதில் எம்.பிரனேஷ், அபிமன்யு புராணிக், லியோன் லூக் மென்டோன்கா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவக்கூடும்.
எம்.பிரனேஷ் 6.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அபிமன்யு புராணிக், லியோன் லூக் மென்டோன்கா ஆகியோர் தலா 6 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். எம்.பிரனேஷ் கடைசி சுற்றில் சர்வதேச மாஸ்டரான ஜி.பி.ஹர்ஷ்வர்தனுடன் மோதுகிறார். அதேவேளையில் அபிமன்யு புராணிக், பா.இனியனுடனும், லியோன் லூக் மென்டோன்கா, அதிபன் பாஸ்கரனுடனும் மோதுகின்றனர்.
8 சுற்றுகளின் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவில் வின்சென்ட் கீமர் 6, அர்ஜுன் எரிகைசி 4.5, முரளி கார்த்திகேயன் 4.5, அனிஷ் கிரி 4, ஜோர்டான் வான் பாரஸ்ட் 4, அவோண்டர் லியாங் 4, விதித் குஜராத்தி 3.5, நிஹால் சரின் 3.5, வி.பிரணவ் 3, ரே ராப்சன் 3 புள்ளிகளுடன் உள்ளனர். 8 சுற்றுகளின் முடிவில் சேலஞ்சர்ஸ் பிரிவில் எம்.பிரனேஷ் 6.5, அபிமன்யு புராணிக் 6, லியோன் லூக் மென்டோன்கா 6, அதிபன் பாஸ்கரன் 5, பா.இனியன் 4.5, திப்தாயன் கோஷ் 3.5, ஆர்யன் சோப்ரா 3, ஜி.பி.ஹர்ஷ்வர்தன் 3, ஹரிகா துரோணவல்லி 1.5, 10. ஆர்.வைஷாலி 1 புள்ளிகளுடன் உள்ளனர்.