சென்னை: பணியின்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், சுயதொழில் தொடங்க ரூ.3.50 லட்சம் வரை மானியம், இலவச காலை உணவு என்பது உட்பட 6 புதிய திட்டங்களுக்கு தமிழகஅமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்கள், 6 புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பிறகு, முதல்வரின் லண்டன், ஜெர்மனி பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டங்கள் குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களின் நல வாழ்வுக்காக அமைச்சரவைக் கூட்டத்தில் பல சிறப்பு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் விவரம்:
தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது, நுரையீரல், தோல் நோய்களால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இத்தகைய தொழில்சார் நோய்களை கண்டறியவும், சிகிச்சைக்கும் தனித் திட்டம் செயல்படுத்தப்படும்.
பணியின்போது உயிரிழக்க நேரிட்டால், தற்போது நலவாரியம் மூலமாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அவர்களது குடும்பத்தின் எதிர்கால நலன், வாழ்வாதாரத்தை முழுமையாக உறுதி செய்யும் வகையில், இந்தநிதியுதவியுடன் கூடுதலாக, தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு இலவசமாக வழங்கப்படும். இதனால், பணியின்போது உயிரிழக்க நேரிடும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் கிடைக்க வழிவகை ஏற்படும்.
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் சுயதொழில் தொடங்கினால், அதன் திட்ட மதிப்பீட்டில் 35 சதவீத நிதி அதிகபட்சம் ரூ.3.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இந்த கடனுதவியைப் பெற்றுதொழில் தொடங்கி கடன் தொகையைதவறாமல் திருப்பிச் செலுத்துவோருக்கு 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். அவர்களது சமூகப்பொருளாதார நிலையை உயர்த்தும் இந்த புதிய திட்டத்துக்கு ஆண்டுதோறும் ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
கல்வி உதவித் தொகை: தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் பயின்றாலும், அவர்களுக்கு உயர்கட்டண சலுகைகள் மட்டுமின்றி, விடுதி கட்டணம்,புத்தக கட்டணங்களுக்கான உதவித்தொகையை வழங்கும் வகையில், புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் நல வாரியத்தின் உதவியோடு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்கள், தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டுதல் என பல்வேறு முறைகளின்கீழ் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டித் தரப்படும். அதேபோல, கிராமப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் வீட்டு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்.
இலவச காலை உணவு: தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையில் பணி மேற்கொள்ளும் சூழலில், காலை உணவு சமைப்பதும், பணிபுரியும் இடத்துக்கு அதை கொண்டு வந்து சாப்பிடுவதும் சிரமமாக உள்ளது. இதற்கு தீர்வாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடுவோருக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் காலை உணவு இலவசமாக வழங்கப்படும். முதல்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் இத்திட்டம் செயல்
படுத்தப்பட்டு, படிப்படியாக மற்றநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
தூய்மைப் பணியாளர்கள் மீதான அக்கறையால் மேற்கண்ட 6 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.எனவே, பொதுமக்களின் நலன்கருதியும், உங்களது மற்ற கோரிக்கைகளை மனதில் வைத்தும், வேலைநிறுத்தத்தை விடுத்து பணிகளுக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.