சென்னை: தமிழகத்தில் திட்டமிட்டு திணிக்கப்படும் வட இந்தியர்களுக்கு வாக்காளர் உரிமை அட்டை வழங்கக் கூடாது என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் 19-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
இது குறித்து சென்னை விருகம்பாக்கம் சின்யமா நகரில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியது: “தாய்மொழி தமிழை கொண்டவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். மற்றொரு மாநிலத்தில் இருந்து வந்து, இங்கு தேர்வு எழுதி மதிப்பெண் எடுத்து அரசு பணியில் கடைநிலை ஊழியர் முதல் அதிகாரிகள் வரை வரை பொறுப்பு பெறலாம் என்ற நிலையை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.
பிற மாநிலங்களில் எந்த நோக்கத்துக்காக இங்கு பணிக்கு வருகிறார், அவர் ஒப்பந்தப் பணியாளராக வருகிறார்களாக என்பதை கண்காணித்து, பணிமுடிந்த பிறகு, சொந்த மாநிலத்துக்கு அவர்கள் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு பணிகளில் அந்தந்த மாநில மக்களுக்கு 90 சதவீதம் பணி வழங்க வேண்டும். ஆனால், இதை செய்வது இல்லை.
கேரளா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் வடமாநிலத்தவர்களுக்கு திட்டமிட்டு 90 சதவீத வேலையை வழங்குகின்றனர். இது இந்தியாவின் இறையான்மைக்கு பிற்காலத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். தமிழக அரசு மற்றும் தனியார் பணிகளை 100 சதவீதம் தமிழர்களுக்கு வழங்குவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்கான சட்டங்கள் வேண்டும். இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
வெளிமாநிலங்களில் இருந்து சாதாரண தொழிலாளர்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. தமிழகத்தில் 90 சதவீத வணிகம் வட இந்தியர் கைகளில் தான் உள்ளது. எங்களின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வணிகத்தை பறித்துள்ளனர். சாதி, மதச் சண்டையை உருவாக்கும் சூழ்ச்சி நடைபெறுகிறது. தமிழர்களின் பண்பாட்டில் கை வைக்கின்றனர். இதற்கு எல்லாம் சரியான தீர்வு எட்டப்பட வேண்டும்.
தமிழகத்தில் திட்டமிட்டு திணிக்கப்படும் வட இந்தியர்களுக்கு வாக்காளர் உரிமை அட்டை வழங்கக் கூடாது, தமிழகத்தில் நுழையும் வட இந்தியர்கள் பணி முடித்து திரும்புவதை உறுதி செய்ய சட்டவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு ஆகியவற்றில் வடஇந்தியர்கள் பங்கு பெருமளவில் உள்ளது. அவர்களின் வருகைக்கு பிறகு, குற்றங்கள் அதிகரித்துள்ளது. சட்டம் – ஒழுங்கு காவல்துறை, உளவுத்துறை விழி பிதுங்கி நிற்கிறது” என்று அவர் கூறினார்.