ஆம்பூர்: சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக எப்போதும் அரணாகவே இருக்கும் என்றும், எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளன என்றும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆம்பூரில் தனது பரப்புரையில் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் இன்று மாலை பொதுமக்கள் மத்தியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசும்போது, “ஆம்பூர் தொகுதி தோல் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். தற்போது, திமுக ஆட்சியில் நிறைய தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். இவையெல்லாம், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சரி செய்யப்படும். சரிந்த தோல் தொழிலை அதிமுக சரி செய்யும்.
ஆம்பூர் தொகுதி இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. அதிமுக -பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக பொய்யான தகவலை பரப்பி வருகிறது. தமிழகத்தில் 31 ஆண்டுகளுகாக ஆட்சி செய்து வந்த அதிமுக சிறு பான்மையின மக்களுக்கு எப்போதும் அரணாகவே இருந்து வந்துள்ளது.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவும் சிறுபான்மையின மக்களுக்கு எப்படி அரணாக இருந்தார்களோ, அதேபோல தான் நாங்களும் இருப்போம். பொய்யான பிரச்சாரம் செய்து வரும் திமுகவின் பேச்சு இனி எங்குமே எடுபடாது. பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் அதிமுக தான் தலைமை தாங்கும். எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளன. எனவே, சிறுப்பான்மையின மக்கள் அதிமுக கூட்டணியை கண்டு அச்சப்பட தேவையில்லை.
அதிமுக ஆட்சியில் இஸ்லாமிய மக்கள் மற்றும் சிறு பான்மையினருக்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கியது அதிமுக அரசு. இப்படி சிறுபான்மையின மக்களுக்காக எப்போதும் அரணாக இருப்பது அதிமுக தான் என்பதை இஸ்லாமிய மக்கள் நினைத்து பார்க்க வேண்டும்.
திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்து விட்டது. பல பச்சை பொய்களை மக்களிடம் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தான் திமுகவினர். இந்த முறை அப்படி நடக்கவிடமாட்டோம். சென்னையில் தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசு தூய்மை பணியாளர்களை கைது செய்துள்ளனர். இதற்கு திமுக உடன் கூட்டணி வைத்துள்ள தோழமை கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.
அதிமுக மக்களுக்கான கட்சி. திமுக குடும்பத்துக்கான கட்சி. வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்றார். அப்போது, எம்.பி. தம்பிதுரை, மாதனூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.வெங் கடேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.