மதுரை: திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது ஓடிபி பெற விதிக்கப்பட்ட தடையை விலக்க மறுத்து, வழக்கு தொடர்பாக திமுக, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் டி.அதிகரையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது பொதுமக்களிடம் ஆதார் எண் மற்றும் தனிப்பட்ட விபரங்களை சேகரிக்க தடை விதித்தும், இதுவரை பெறப்பட்ட தனிப்பட்ட விபரங்களை அழிக்கவும், சட்ட விரோதமாக ஆதார் மற்றும் தனிப்பட்ட விபரங்களை சேகரிக்கும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது ஓடிபி எண் பெறுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இந்தத் தடையை விலக்கக் கோரி திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் மகேந்திரன் வாதிடுகையில், ‘இந்த வழக்கு தொடர்பாக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. திமுக சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை’ என்றார்.
திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் பொதுமக்களிடம் ஆதார் விவரங்கள் சேகரிக்கவும், சேகரிக்கப்பட்ட ஆதார் விவரங்களை அழிக்கவும் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓடிபி பெறுவதற்கு மனுதாரர் தடை கோரவில்லை. திமுகவின் உறுப்பினர் சேர்க்கையின் போது ஆதார் விவரம் பெறுவதில்லை. அப்படியிருக்கும் போது இந்த வழக்கு தேவையில்லாதது. அரசியல் காரணங்களுக்காக அதிமுக சார்பில் ஆதார் விவரங்களை கேட்பதாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதேபோன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு தடை கோரி அதிமுக எம்பிக்கு உச்ச நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. உறுப்பினர் சேர்க்கையின்போது ஆதார் விவரங்கள் கேட்கப்படுவதில்லை. இதனால் ஓடிபிக்கான தடையை நீக்க வேண்டும்” என்றார். உதவி சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன் வாதிடுகையில், ‘தனிப்பட்ட நபர்களின் ஆதார் விவரங்களை சேகரிப்பது குற்றமாகும். ஓடிபி பெறுவதும் குற்றம்தான். இது தொடர்பான விரிவான பதில் மனு தயாராக உள்ளது. அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்’ என்றார்.
அதற்கு மூத்த வழக்கறிஞர் வில்சன், “உறுப்பினர் சேர்க்கையின்போது ஆதார் விவரங்கள் கேட்காத நிலையில் ஆதார் அமைப்பின் பதில் தேவையில்லை. இந்த வழக்கில் மத்திய அரசு ஏன் வர வேண்டும். மத்திய அரசு திமுகவுக்கு எதிராக உள்ளது” என்றார்.
பின்னர் நீதிபதிகள், “உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்கவில்லை. ஓடிபிக்கு மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றனர். தொடர்ந்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் வாதிடுகையில், “வாடிக்கையாளர்களை உறுதி செய்ய ஓலா, சொமாட்டா, ஸ்விகி நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் ஓடிபி எண் பெறுகிறார்கள்” என்றார்.
அதற்கு நீதிபதிகள், “ஓலா, சொமாட்டா, ஸ்விகி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை உறுதி செய்ய ஓடிபி பெற சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்த நிறுவனங்களுக்கு தனியுரிமை கொள்கை உள்ளது. அந்த தனியுரிமை மீறப்பட்டால் விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம். ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் தனியுரிமை கொள்கை இல்லை. அப்படியொரு கொள்கை இல்லாமல் ஓடிபி பெறுவது சட்டவிரோதம்.
திமுக சார்பில் ஆதார் விவரங்கள் பெறவில்லை என்பதை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும். ஆதார் அமைப்பு சார்பில் ஓடிபி பெறுவது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என கூறி விசாரணையை ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.