விஜயவாடா: தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் ஆந்திர அமைச்சரான நாரா லோகேஷை சந்தித்து, தென் மாநிலங்களின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கான சவுத் ரைஸிங் ‘South Rising’ இயக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, ஆந்திர அமைச்சர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாரா லோகேஷை விஜயவாடாவில் உள்ள முதல்வர் இல்லத்தில் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, அமர் பிரசாத் ரெட்டிக்கு மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதை முன்னிட்டு, நாரா லோகேஷ் அவருக்கு சிறப்பு விருந்தினை வழங்கினார்.
நீண்டகால நண்பர்களாக இருக்கும் இரு தலைவர்களும், தென் மாநிலங்களின் ஒருமைப்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சார ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுவதற்கான தங்கள் ஒருங்கிணைந்த பணி குறித்து ஆழ்ந்த உரையாடலில் ஈடுபட்டனர். இதில், ‘South Rising’ என்ற பொதுவான குறிக்கோளை முன்னிறுத்தி, அதனை பிரதமரின் தேசியக் கண்ணோட்டத்துடன் இணைத்து செயல்படுத்துவது பற்றி முக்கியமாக பேசப்பட்டது.
நாரா லோகேஷ், பிரதமர் நரேந்திர மோடியிடம் கொண்டிருக்கும் அன்பும் மரியாதையும் குறித்து அமர் பிரசாத் ரெட்டி பாராட்டுத் தெரிவித்தார். தென் மாநிலங்களின் பலங்களை ஒன்றிணைத்து, இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை வேகப்படுத்தும் முயற்சியாக “South Rising” இருக்கும் என இரு தலைவர்களும் உறுதி செய்தனர்.
“நமது நட்பு இன்று ஒரு பொதுவான பணிக்குத் துளிர்த்துள்ளது. ‘South Rising’ என்பது அரசியலைத் தாண்டி மக்களும், வளர்ச்சியும், ஒன்றுபட்ட தென்னகமும் ஆகியவற்றின் சக்தியாகும்.” என அமர் பிரசாத் ரெட்டி குறிப்பிட்டார்.
இரு தலைவர்களின் மதிய உணவு சந்திப்பு, தென் மாநிலங்களின் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒருங்கிணைந்து பணியாற்றும் உறுதிமொழியுடன் நிறைவுற்றது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.