கொடைக்கானலில் சாலையோரம் நிறுத்தப்பட்ட ஜீப்பை அகற்றாமல் சாலை அமைத்தது நகராட்சி மற்றும் ஒப்பந்ததாரரின் அலட்சிய போக்கே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். பொதுமக்களும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் (பேட்ஜ் ஒர்க்) பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில், சாலையோரம் நிறுத்தப்பட்ட ஜீப் அகற்றாமல் அப்படியே சாலை அமைக்கப்பட்டது.
இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. சாலை அமைக்கும் பணிக்காக வந்த ஊழியர்கள், ஜீப்பின் உரிமையாளரை தேடியதாகக் கூறப்படுகிறது. அவர் கிடைக்காததால் வேறு வழியின்றி ஜீப்பை அகற்றாமல் சாலையை அமைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, சாலை அமைக்கும் பணி தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் அந்த ஜீப்பை அகற்றி இருக்கலாம். ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமலும், ஜீப்பையும் அகற்றாமலும் சாலை அமைத்துள்ளனர். இதற்கு முழுக்க முழுக்க நகராட்சி அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம். சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடக்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்பார்வையிட வேண்டும். தற்போது அமைக்கப்படும் சாலை ஓரிரு நாட்களிலேயே பெயர்ந்து வருகிறது, என்றனர்.