டிரினிடாட்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடரை 2-1 என கைப்பற்றி சாதனை படைத்தது.
டிரினிடாட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. தனது 19-வது சதத்தை அடித்த கேப்டன் ஷாய் ஹோப் 94 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் விளாசினார்.
இறுதிக்கட்டத்தில் அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஜஸ்டின் கிரீவ்ஸ் 24 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு கடைசி 8 ஓவர்களில் 110 ரன்கள் விளாசியது. எவின் லீவிஸ் 37, ராஸ்டன் சேஸ் 36 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா, அப்ரார் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
295 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 29.3 ஓவர்களில் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சல்மான் ஆகா 30, முகமது நவாஸ் 23, ஹசன் நவாஸ் 13, பாபர் அஸம் 9, நசீம் ஷா 6 ரன்கள் சேர்த்தனர். சைம் அயூப், அப்துல்லா ஷபிக், கேப்டன் முகமது ரிஸ்வான் ஹசன் அலி, அப்ரார் அகமது ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 7.2 ஓவர்களை வீசி 18 ரன்களை மட்டும் வழங்கி 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு ஒருநாள் போட்டி தொடரை 34 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் வென்றுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. கடைசியாக அந்த அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 1991-ம் ஆண்டு வென்றிருந்தது.