சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தை சுற்றி 2 நாட்கள் ட்ரோன் பறக்க காவல் ஆணையர் அருண் தடைவிதித் துள்ளார். நாடு முழுவதும் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டா லின் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இதையொட்டி, சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
9 ஆயிரம் போலீஸார்: மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), கார்த்திகேயன் (போக்குவரத்து), பிரவேஷ்குமார் (வடக்கு) மேற்பார்வையில், சுமார் 9,000 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய இடங்களில் வழக்கத்தைவிட கூடுதலாக போலீஸார் பணியமர்த்தப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் பலப்படுத்தபட்டு வருகிறது.
வாகன சோதனை: இதுதவிர சென்னை யிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் இப்போதே தீவிர வாகனத் தணிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக சென்னையில் ஆக. 14 மற்றும் 15 (வியாழன், வெள்ளி) ஆகிய இரு நாட்களிலும், அரசு ஏற்பாடுகள் தவிர தலைமைச் செயலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், முதல்வரின் இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரையிலும் முதல்வர் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றைப் பறக்க தடை விதிக்கப்படுவதாக காவல் ஆணையர் அருண் அறிவித்துள்ளார்.