சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்தியும், ‘கூலி’ வாய்ப்புக்கு நன்றி தெரிவித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் நாளை (ஆக.14) வெளியாகவுள்ளது. இதனை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “என் திரையுலக பயணத்தில் ‘கூலி’ படத்துக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. மேலும், இப்படத்தில் பணிபுரிந்த அனைவருமே தங்களது அன்பைக் கொட்டி உருவாக்கி இருக்கிறார்கள். அதற்கு காரணம், நீங்கள்தான் தலைவர் ரஜினி சார். இந்த வாய்ப்புக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
‘கூலி’ படம் தொடர்பாகவும், அதற்கு வெளியிலும் நீங்கள் பகிர்ந்துகொண்ட உரையாடல்கள் எனக்கு என்றும் நினைவாக இருக்கும். என் இதயத்தின் ஆழத்திலிருந்து, எங்களை எல்லாம் நேசிக்கச் செய்ததற்கும், நீங்கள் வழங்கும் வியப்பூட்டலுக்காகவும், உங்கள் வழியிலே கற்றுக்கொண்டு வளரச் செய்ததற்காகவும் மிக்க நன்றி. 50 ஆண்டு கால சாதனைக்கு இனிய வாழ்த்துகள். நாங்கள் உங்களை நேசிக்கிறோம் தலைவா!” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.