அமராவதி: “ஆந்திராவில் நடந்த வாக்குப்பதிவு முரண்பாடுகள் குறித்து ராகுல் காந்தி பேசுவதில்லை. ஏனெனில், ரேவந்த் ரெட்டி மூலமாக சந்திரபாபு நாயுடுவுடன் அவர் தொடர்பில் இருக்கிறார்” என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய ஒய்எஸ்ஆர்சிபி தலைவரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, “ ஆந்திராவில் நடந்த வாக்குப்பதிவு முரண்பாடுகள் குறித்து ராகுல் காந்தி பேசுவதைத் தவிர்க்கிறார். ஏனெனில் அவர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மூலமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஹாட்லைனில் தொடர்பில் இருக்கிறார். எனவே, ஆந்திரா பற்றி ராகுல் காந்தி பேசுவதில்லை. ஆகவே, ராகுல் காந்தியைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? அவர் நேர்மையற்றவர் தானே?!” என்று கூறினார்.
மேலும், “ராகுல் காந்தி வாக்கு திருட்டு பற்றிப் பேசுகிறார். ஆனால், வாக்குப் பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டதற்கும் ஆந்திராவில் வாக்குகள் எண்ணப்பட்டதற்கும் உள்ள 12.50 சதவீத வாக்கு வித்தியாசத்தைப் பற்றி அவர் ஏன் பேசவில்லை?” என்று ஜெகன் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வாக்கு திருட்டு மற்றும் பிஹார் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.